இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக் கையை வளர்க்கும். ஆனால் இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர்நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 1666-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங் பிறந்தார். அவரது தலைமையிலான சீக்கிய படைகளுக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப் படைகளுக்கும், இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றன.
கடந்த 1705-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி பஞ்சாபின் சம்கவுர் பகுதியில் சீக்கிய படைக்கும் அவுரங்கசீப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் சாஹிப்ஜாதா அஜித் சிங் (18), சாஹிப்ஜாதா ஜுஜார் சிங் (14) வீர மரணம் அடைந்தனர்.
பின்னர் கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் பாபா சோராவார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோர் முகலாய படை வீரர்களால் கடத்தப்பட்டனர். இரு குழந்தைகளையும் மதம் மாறச் சொல்லி நவாப் வாசிர் கான் என்பவர் நிர்பந்தித்தார். வீரமிக்க இரு சிறுவர்களும் மதம் மாற மறுத்துவிட்டனர். கடந்த 1704-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரு சிறுவர்களையும் உயிரோடு புதைத்து சமாதி கட்டப்பட்டது. அவர்களின் வீர மரணத்தின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி வீர பாலகர் தினம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரியில் அறிவித்தார்.
இதன்படி முதலாவது வீர பாலகர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:
அஞ்சாத குரு கோவிந்த் சிங் வீர பாலகர் தினம் இந்தியாவின் வீரம், தியாகம், சீக்கிய பாரம்பரியத்தின் அடையாளம் ஆகும். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு சம்கவுர், சிர்ஹிந்த் போர்கள் நடைபெற்றுள்ளன. மதஅடிப்படைவாதத்தை பின்பற்றிய முகலாய படைகளுக்கு எதிராக நமது குருக்கள் துணிச்சலாக போராடி உள்ளனர். சீக்கிய குரு கோவிந்த் சிங்கும், அவரது மகன்களும் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை. யார் முன்பும் தலைவணங்கவில்லை. கோவிந்த் சிங்கின் சிறுவயது மகன்கள் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர். ஒருபுறம் மிருகத்தனம், மறுபுறம் பொறுமை, வீரம் வெளிப்பட்டது.
வீரம், தீரம், தியாகம் ஆகிய பாரம்பரியங்களை கொண்டது நமது இந்திய தேசம். நாட்டின் வீர வரலாறு சுயமரியாதை, தன்னம்பிக்கையை வளர்ப்பதாக உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் நமக்கு கற்பிக்கப்பட்டு, தாழ்வு மனப்பான்மையை தூண்டின. எனினும் இந்திய சமூகம், நமது பாரம்பரியம், வீர, தீரமிக்க கதைகளை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
சிறு வயது மகன்கள் அவுரங்கசீப்பின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இந்தியாவை மாற்றும்அவரது எண்ணத்துக்கு எதிராக குரு கோவிந்த் சிங் மலை போல் எழுந்துநின்றார். அவரது சிறுவயது மகன்களுக்கும் அவுரங்கசீப்புக்கும் என்னபகை இருக்க முடியும்? 2 அப்பாவிசிறுவர்களை உயிருடன் சமாதி கட்டியது ஏன்?
அவுரங்கசீப்பும் அவரது சுல்தான்களும் வாள்முனையில் குரு கோவிந்த் சிங்கின் மகன்களை மதம் மாற்ற விரும்பினர். ஆனால் இரு சிறுவர்களும் மதம் மாறவில்லை. மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. இதுதான் தேசத்தின் பலம்.இந்த மன உறுதியுடன் இளம் தலைமுறையினர் இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல முயன்று வருகின்றனர்.
தேசத்துக்கு முதலிடம் தேசத்துக்கு முதலிடம் என்ற கொள்கையுடன் குரு கோவிந்த் சிங்வாழ்ந்தார். நாட்டுக்காக தனது மகன்களை தியாகம் செய்தார். அவரது தியாகம் நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. அவரது தியாகம், வீரத்தை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும்.
பகவான் ராமரின் கொள்கைகளை நாம் நம்புகிறோம். புத்தர், மகாவீரரிடம் இருந்து உத்வேகம் பெறுகிறோம், குரு நானக் தேவ் வார்த்தைகளை பின்பற்றி வாழ்கிறோம்.
இந்திய வரலாறு, சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத தலைவர்கள், பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மக்கள் அறிந்துகொள்ள அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். இந்த பயணத்தில் வீர பாலகர் தினம் ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்கின் மகன்களின் தியாகமும் வீரமும் ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைய வேண்டும். அவர்கள் நாட்டின் அர்ப்பணிப்புள்ள குடிமக்களாக மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.