ஈராக்கின் மொசுல் நகரை மீட்கும் போரில் கனேடிய படைகள்
இஸ்லாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து ஈராக்கின் மொசுல் நகரை மீட்பதற்காகப் போரிடும் குர்தீஷ் போராளிகளுக்கு கனேடியப் படைகளும் ஆதரவு வழங்கி வருவதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கையை ஈராக்கின் இராணுவமும் குர்தீஷ் போராளிகளும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.
கனேடியப் படையினரால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்றுவிக்கப்பட்ட குர்திஷ் படையினர் மொசுல் நகரை விடுவிக்கும் நடவடிக்கையின் போது பல கிராமங்களை மீட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லிபரல் அரசினர் இந்த வருட ஆரம்பத்தில் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இருந்து போர் விமானங்களை மீளப்பெற்றிருந்தாலும், 170 கனேடியத் துருப்பினர் தொடர்ந்தும் குர்திஷ் படைகளுடன் இணைந்து செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது