காணாமல் போனோர் தொடர்பில் ஐ. நா கூறுவது என்ன?
அன்று தெற்கின் சிங்கள இளைஞர் யுவதிகளுடன் ஆரம்பமாகிய காணாமல் போகும் விடயம் 1972 ம் ஆண்டின் பிற்பகுதியில் வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் காணாமல்போவது ஆரம்பமாகியது. அன்று வடக்கு -கிழக்கில் காணாமல் போனோர் அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் தமிழர்களது தாயக பூமியின் நாலா பக்கமும் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன .
காலங்கள் புரண்டு ஓடி இலங்கை உலகத்திலேயே காணாமல் போவோர் விடயத்தில் முதன்மை வகிக்கும் நிலையில் வடக்கு- கிழக்கு தெற்கு உட்பட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள், பெரியோர்கள், குடும்பத் தலைவர்கள், தலைவிகள், கல்விமான்கள், மனித உரிமை ஆர்வலரென பட்டியல் நீண்டுக்கொண்டே போகும் அளவிற்கு மனிதர்கள் காணாமல் போனார்கள் போய்க் கொண்டும் உள்ளார்கள். எதிர்காலத்தில் போவார்கள் என்ற நிலையில் இலங்கைத்தீவின் நிலை இன்று மாறியுள்ளது.
ஆரம்பத்தில் காணாமல் போவோர் விடயத்தில் அலட்சியமாகவிருந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் மேற்கு நாடுகளும் காலப்போக்கில் இலங்கைத் தீவின் உண்மை நிலையை அறிந்து தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன. இவ்விடயத்தில் அன்றும் இன்றும் செயற்படுகின்ற மனித உரிமை செயற்பாட்டாளரின் அணுகு முறைகள் மிக துணிச்சலாக இருந்த போதும் இவை மிகவும் அபாயம் நிறைந்ததாகவும் காணப்பட்டன.
இவ்விடயத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் உள்ளனர். இவ்விடயங்களில் அன்று முன்னின்று உழைத்த தமது உயிர்களை அர்ப்பணித்த ரிச்சர்ட் டி.சொய்சா, குமார் பொன்னம்பலம், தராகி சிவராம், ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க போன்ற பலரை நாம் இவ்வேளையில் நினைவு கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இவர்கள் போன்ற பலரின் செயற்பாடுகளினால் சர்வதேசத்தில் இலங்கையில் காணாமல் போனோர் பற்றி கவனத்தில் கொண்டுள்ள பல அமைப்புகளில் முக்கியமான ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் பற்றி பரிசீலிக்கும் குழு (un working group on enforced or inovoluntary Disappearances) காணப்படுகிறது.
இக்குழு காணாமல் போனோர் பற்றி பரிசீலிப்பதற்காக நான்கு தடவைகள் அதாவது 1991 ம் ஆண்டு ஒக்டோபர் 1992 ஆம் ஆண்டு இறுதி மற்றும் கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைத் தீவிற்கு விஜயம் செய்துள்ளது.
வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் விடயத்திற்கு முக்கிய காரணிகளாக இலங்கை அரச படைகள் இவற்றுடன் உறவாடிய ஒட்டுக்குழுக்கள் இவற்றுடன் ஆயுதக்குழுக்களும் பொறுப்பு கூற வேண்டியவர்களாக காணப்படுகின்றன.
இவற்றுடன் 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு அமைதிப் படைகளாக வருகை தந்த இந்திய இராணுவமும் காரணமாகவுள்ளது. போர் முடிவுற்றதும் அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள், யுவதிகள், முதியோர்கள் என எண்ணில் அடங்காதவாறு வடக்கு – கிழக்கில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
போர் முடிவுற்றதும் இவ்விடயத்தில் அக்கறை கொண்டு உலகம் பூராகவும் உள்ள புலம் பெயர் அமைப்புகள் தமது நாடுகளில் உள்ள தமிழர்கள் கூடும் தேவாலயங்கள், கோயில்கள், தமிழ் பாடசாலைகள் போன்ற இடங்களில் நின்று வடக்கு – கிழக்கில் காணாமல் போனோர் பற்றிய விபரங்களைத் திரட்டினார்கள். ஆனால் இன்றுவரை இவ்விபரங்களிற்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறியவுமில்லை.
தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம் ஐ.நா.விற்கு மனித உரிமை மீறல் விடயத்தில் தகவல் சமர்ப்பிப்பதில் இரு தசாப்தங்கள் கொண்ட அனுபவத்தின் காரணத்தால் இவ்வமைப்புகள் திரட்டிய தகவல்களை எம்மிடம் கொடுத்தால் இவற்றை எளிய முறையில் ஐ.நா.விற்கு சமர்ப்பிக்க முடியுமென வேண்டுகோள் விடுத்திருந்தும் இன்று ஏழு வருடங்களாகியும் திரட்டிய தகவல்கள் எங்கு சென்றன என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
இவற்றை மிக சுருக்கமாக கூறுவதானால் அன்றிலிருந்து இன்று வரை சரியாக நேர்த்தியாக திரட்டப்படவும் இல்லை . இவை சரியான முறையில் ஐ. நா. வின் காணாமல் போனோர் பற்றி பரிசீலிக்கும் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ. நா . அறிக்கை
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. குழுவினர் காணாமல் போனோர் விடயத்தில் பல உண்மைகளையும் தகவல்களையும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் தாம் இலங்கைத் தீவில் அறிந்தவற்றையும் அரசிற்கு சில சிபாரிசுகளையும் தொகுத்து ஓர் அறிக்கையாக நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து இருந்தனர்
இவ் அறிக்கையின் கோலை இலக்கம் A/ HRC/ 33/51/Add.2 என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இருபத்திரண்டு பக்கங்களையும் எண்பத்தி ஐந்து பெரிய உப பந்திகளை உள்ளடக்கிய அறிக்கையாக காணப்படுகிறது. இந்த அறிக்கையின் முன்னுரையில் ஐ.நா. காணாமல் போனோர் பற்றி ஆராயும் குழு இலங்கைத் தீவில் யார் யாரை சந்தித்தது. தாம் எந்த எந்த இடங்கள் நகரங்களிற்கு விஜயம் செய்தது என குறிப்பிடப்பட்டுள்ளன
இவ் அறிக்கையின் 7 வது பந்திக்கு அமைய ஐ.நா. காணாமல் போனோர் பற்றி பரிசீலிக்கும் குழு கடந்த காலங்களில் பன்னிராயிரம் பேர் காணாமல் போயுள்ளோர் பற்றிய விபரங்களை அரசிடம் சமர்பித்து இருந்ததாகவும் இவற்றில் ஐயாயிரத்து எழுநூற்று ஐம்பது பேர் தொடர்பில் இன்னும் அரசினால் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை யாவும் பெரும்பாலாக 1980-1990 இல் ஜே.வி.பி. யுடன் தொடர்பு உடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உண்மையில் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு மிகவும் கவலை தரும் செய்தியாகும். அன்று வரை ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் காணாமல் போயுள்ள நிலையில் ஐ.நா.வின் காணாமல் போனோர் பற்றி பரிசீலிக்கும் பிரிவிடம் வடக்கு கிழக்கு பற்றிய புள்ளி விபரங்களை் மிகவும் குறைந்தே காணப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து எட்டாவது ஒன்பதாவது பந்தியில் வெள்ளை வேன் கடத்தல்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஆட்கள் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் 13 வது பந்தியின் பிரகாரம் ஐ.நா. காணாமல் போனோர் பற்றி பரிசீலிக்கும் குழுவினர் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரகடனத்தில்
தம்மை ஓர் அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுரை கூறப்பட்டுள்ளதுடன் மற்றைய சர்வதேச மனித உரிமை பிரகடணத்திலும் கையெழுத்திட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இதனது 17வது பந்தியில் தமது விஜயத்தின் பொழுது தாம் திருக்கோணமலை கடற்படை முகாமிற்கு சென்றிருந்த வேளையில் நிலத்திற்கு கீழ் உள்ள பதினொரு ரகசிய தடுப்பு முகாம்களை பார்த்ததாகவும் குறிப்படப்பட்டுள்ளது.
இதனது 18 வது பந்தியில் கடந்த ஆண்டு 2015 பெப்ரவரி மாதம் சாட்சிகளின் பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தும் அவற்றில் குறை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பந்திகள் 24.25 க்கு அமைய 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி ராஜபக்ஷ வினால் காணாமல் போனோர் பற்றி ஆராய்வதற்கு புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும்
இவ் ஆணைக்குழுவை பரணகம ஆணைக்குழு என அழைப்பதாகவும் இது ஆரம்பத்தில் 1990 ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் 2009 ம் ஆண்டு மே மாதம் 19 ம் திகதி வரை காணாமல் போனோர் பற்றி ஆராய்வதற்ககாக நியமிக்கப்பட்டதாகவும் இறுதியில் 1983 ம் ஆண்டு முதல் 2009 வரை காணாமல் போனோர் பற்றி ஆராய வேண்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் 27 வது பந்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் வேடிக்கையானது. பரணகம ஆணைக்குழுவில் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் அப்படியிருந்தும் பரணகம ஆணைக்குழுவுக்கு இருபதாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதும் நூற்று ஐம்பது முறைப்பாடுகளே விசாரணைக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
பரணகம என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்வுக்கு நெருக்கமானவர் என்பதும் இவர் ராஜபக்ஷ அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை மூடி மறைக்க நியமிக்கப்பட்டவர் என்பதை உலகறியும் என்பது கருத்து புதை குழிகள் இவ்வறிக்கையின் 38 வது பந்திக்கு அமைய 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மன்னாரில் 83 பெண் பிள்ளைகளது எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இவை பேராதனை பல்கழைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவை பற்றிய தகவல்கள் விளக்கம் அற்று காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் 41 ஆவது பந்திக்கு அமைய இலங்கையில் காணப்படும் புதை குழிகள் யாவும் காணாமல் போனோருடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தமக்கு சகல இடங்களிற்கும் விஜயம் செய்து பார்வையிட முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 44 ஆவது பந்திக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் சில சமயங்களில் இப்போராளிகளின் பெற்றோர்களும் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவை சார்ந்தவர்களும் யுத்தத்தில் ஈடுபடாதவர்களும் பாதுகாப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போக காரணமாக இருந்தோர் தண்டிக்கப்படாது அலட்சியம் செய்யப்படுவது ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
இலங்கையின் விசாரணைகளை ஆதாரங்களுடன் பார்க்கும் போது நீதி விசாரணைகளில் நிச்சயம் சர்வதேச நீதிபதிகள் வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறதென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் காணாமல் போயுள்ளோரின் உறவினர்கள் இம்சிக்கப்படுவது பற்றி தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நஷ்ட ஈடு காணாமல் போனோர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்குவது ஓர் முக்கியமான விடயமாக தாம் எண்ணுவதாக அறிக்கை கூறுகிறது. காணாமல் போனோரின் தாய், மனைவி, பிள்ளைகள் எந்தவித பொருளாதார உதவிகளும் இல்லாது காணப்படுவதாகவும் காணாமல் போனோர் என கூறப்படுவோர் அல்லாத காரணத்தினால் அவர்களை நம்பி வாழ்க்கை நடத்திய குடும்பங்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுளளதாகவும் அறிக்கைளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் 61 வது பந்திக்கு அமைய ஐ. நா. குழுவினர் தாம் நூற்றுக்கனக்கான காணாமல் போனோரின் உறவினர்களை விஷேடமாக தாய் மனைவி சகோதரிகள் மகள்மாரை, மகன்மாரை சந்தித்து உறையாடிள்ளதாகவும் இவர்களில் சிலரது குடும்பங்களில் பலர் காணாமல் போயுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பலர் தாம் தமது உறவினர்களை தேடும் வேளையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களது சமுதாயத்தில் உள்ளவர்களினால் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
காணாமல் போன சிலரது பிள்ளைகள் தாய், தகப்பன் இருவரையும் இழந்து காணப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் பெற்றோருடன் சிறு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. அறிக்கையின் 64 ஆவது பந்திக்கு அமைய காணாமல் போனோரது உறவினர் எந்தவித நட்ட ஈடும் பெற முடியவில்லையென்றும் தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பாதிக்கப்பட்டோர் ஒருலட்சம் ரூபாவைப் பெற முடியும் என்பது 1988 ம் ஆண்டின் விதி முறைகளுக்கு அமைய கூறப்பட்டுளளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.
இந்த நஷ்ட ஈட்டை இறப்பு சான்றிதழைச் சமர்பிப்பதன் மூலமே பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கூறப்பட்டுள்ள நஷ்ட ஈடு என்பது அதுவரையில் மாற்றம் அடையா விடினும் சிலரது உறவினர்கள் 2 லட்சம் ரூபா வரைப் பெற்றுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. அவ்விரண்டு லட்சம் நஷ்ட ஈடு என்பதை நிச்சயம் தெற்கில் காணாமல் போன சிங்களவர்களது உறவினர்களே பெற்றிருக்கலாம் என்பது கருத்து.
ஐ.நா குழு அறிந்தவரையில் இந்த நஷ்டஈடு என்பது இறப்பு அல்லது மரணச் சான்றிதழை ஏற்கும் காணாமல் போனோரது குடும்பங்களுக்கு தொடர்ந்து காணாமல் போனோர் பற்றிய தேடுதல்களை நிறுத்திக் கொள்வதற்கு மட்டுமே. இதன் காரணம் ஐ.நா குழு வற்புறுத்துவது என்னவெனில் இறப்புச் சான்றிதழைப்பெறும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போனவர் பற்றிய தேடுதலை நிறுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே.
அதன் காரணம் ஐ.நா குழு வற்புறுத்துவது என்னவெனில் இறப்புச் சான்றிதழை பெறும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போனவர் பற்றிய உண்மைகளை அறிய உரித்துடையவர். இதன் அடிப்படையில் அண்மையில் தீர்மாணிக்கப்பட்டதற்கமைய காணாமல் போனோர் விடயத்தில் மரணச் சான்றிதழுக்கு பதிலாக ஆய் இல்லை( certificates of absence ) என்ற விடயம் வரவேற்க தக்கதாக அறிக்கை கூருகிறது .
67 ஆவது பந்திக்கு அமைய வடக்கு, கிழக்கில் இராணுவம் தொடர்ந்து அதிகமான தனியார் நிலங்களை அபகரித்துள்ளமை தம்மை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளதாக ஐ.நா . குழு கூறுகிறது. காணமல் போனோருக்கும் இடம் பெயர்ந்தோர் விடயங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் காணமல் போனோரின் உறவுகள் இடம் பெயர்வால் அப்புறப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அரசு எவ்வித ஆக்க பூர்வமான வேலைகளையும் செய்யவில்லை என்ற குற்றச் சாட்டை ஐ.நா. குழுவினர் அறிந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமல் போனோரை நினைவு கூரும் நினைவுச் சின்னங்களோ அல்லது வேறு நினைவு கூரக் கூடிய விடயங்களோ அங்கு பெரிதாக காணப்படவில்லையெனவும் இவற்றிற்கு அரசின் ஆதரவுகள் பெரிதாக காணப்படவில்லையெனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தற்பேது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டும் இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்கள் பெயர் மாற்றப்பட்டிருந்த பொழுது இராணுவம் அவர்களது குடும்பத்தினருக்கும் புகழ்ந்து விழாக்கள் எடுத்த பொழுதும் போர்க் காலங்களில் உயிரிழந்த பொது மக்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது .
இதேவேளை காணாமல் போனோர் விடயத்தில் முன்னேற்றம் காணப்படுவதற்கும் இவற்றை அங்கு இல்லாமல் செய்வதற்கான பல ஆலோசனைகளை விசேடமாக சட்டத்துடனான மாற்றங்கள் பற்றி ஐ.நா. குழு இலங்கைக்கு சிபாரிசு செய்துள்ளது.
முக்கிய குறிப்பு
01 வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோர் ஆகிய விடயங்களில் சரியான, தெளிவான பெயர்ப் பட்டியலோ இன்றுவரை யாரிடமும் இல்லை. இவற்றை பட்டியலிட நாம் முன்வர வேண்டும் .
02 காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோரது சகல விபரங்களையும் ஐ.நா.வில் உள்ள அவற்றிற்குரிய பிரிவுகளிற்கு உரிய முறையில் சமர்பிப்பதன் ழூலம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு நடந்தவை, நடப்பவை யாவும் ஓர் இன அழிப்பு என்பதை எம்மால் சர்வதேசத்திற்கு நிருபிக்க முடியும் .
1990 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வேளையே பிரதானமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொண்டிருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலம் பெயர் தேசங்களில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட சில கோடரி கொம்புகளினால் ஐ.நா. வேலைத் திட்டங்கள் யாவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் கவலை தரும் விடயம்