மூன்றாவது முறையாக உலகக்கிண்ணம் வென்று சாதனை படைத்த இந்திய அணி
உலகநாடுகள் பங்கேற்கும் உலகக்கிண்ணம் கபடிப் போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது.
இதில் இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, ஈரான், அர்ஜென்டினா, போலாந்து, கென்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய 12 அணிகள் பங்கேற்றன.
இதில் இந்திய அணி தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று மற்றொரு பிரிவிலும் ஈரான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் சற்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய ஈரான் அணி முதல் பாதியில் 18-13 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன் பின்னர் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட இந்திய அணி வீரர்கள் சற்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
இதன் பயனாக இந்திய அணி இறுதியில் 38-29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக் கிண்ணம் கபடி போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து முக்கிய பிரபலங்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.