இன நல்லிணக்கத்திற்கான அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி கடந்த வாரம் தீவிர கவனம் செலுத்தினார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது
இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
வரவு செலவுதிட்டம் நெருக்கடியின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதால் அரசாங்கத்திற்குரிய நிதி கிடைப்பது உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்கிழமை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெறவுள்ள இன நல்லிணக்கம் குறித்த கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கான நடவடிக்கைகளில் கடந்த வாரம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
வியாழக்கிழமை ஜனாதிபதியின் தற்காலிக இல்லத்தில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது பேச்சுவார்த்தைகளிற்கான பரந்த வரையறைகள் குறித்து ஆராயப்பட்டது.
ஜனாதிபதியுடன் பிரதமர் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைகள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது முதல் சுமந்திரன் இந்த செயற்பாடுகளிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவருகின்றார்.
வெள்ளிக்கிழமை சுமந்திரன் தனது கட்சியின் தலைவர் சம்பந்தனிற்கு ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவித்தார். கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சம்பந்தன் கலந்துகொள்வார்.
சுமந்திரன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளமை தமிழ்தேசிய கூட்டமைப்பு அவரின் ஊடாகவே தனது நிலைப்பாட்டை முன்வைக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார் அதில் முக்கியமானது மாகாணசபை தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது தொடர்பானது.
மாகாணசபை தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது குறித்து வேறு காரணங்களிற்காக ஜனாதிபதி முன்னர் தயக்கம் வெளியிட்டிருந்தார்.
மாகாணசபைகளிற்கு தற்போது சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டத்திலிருந்தும் பல யோசனைகளை சுமந்திரன் முன்வைத்திருந்தார்.
மாகாணசபை தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துமாறும் மாகாணசபை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைபப்டுத்துமாறும் சுமந்திரன் வழங்கியுள்ள ஆலோசனைகள் இந்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஒத்தவையாக காணப்படுகின்றன.