தெற்கிலிருந்து தமிழ் மக்களை விரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பியமை போன்று, இன்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களை வெளிநாடுகளுக்கு விரட்டவும், இடம்பெயரச் செய்யவும் பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழில் நேற்று (07.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,‘’வடக்கு மாகாணத்துக்காக எந்தவொரு பொருளாதார மையங்களையும் அமைக்கப்போவதாக வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் குறிப்பிடவில்லை.
மக்களின் வாழ்வாதாரம்
திருகோணமலையில் ஒரு பொருளாதார மையத்தை அமைக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிங்களவர்களை அங்கு கொண்டுவந்து அந்த மையத்தை அபிவிருத்தி செய்யப் போகின்றார்கள்.
539 பில்லியன் ரூபா 2023இல் பாதுகாப்புச் செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடித்து தங்கள் வசம் வைத்துக் கொண்டு சிவில் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
539 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்குக் காரணம் இராணுவத்தை இங்கு வைத்திருந்து வடக்கு மாகாண மக்களை அடக்கி வருங்காலத்திலே பொருளாதார காரணங்களுக்காக அவர்களை விரட்டும் ஒரு நிலையை ஏற்படுத்துவதேயாகும்’’ என தெரிவித்துள்ளார்.