சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்
தமிழ் மக்கள் இலட்சம் உயிர்களை தியாகம் செய்தது மாவட்ட சபைக்காக அல்ல என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சுயநிர்ணய உரிமை கொண்ட சமஸ்டி ஆட்சியே ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் மேலும் கூறியுள்ளதாவது:
இலட்சம் உயிர்களின் இலட்சியம்
“ஸ்ரீலங்கா அரசின் இனஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தாயக ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சுமார் நாற்பதாயிரம் போராளிகள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்புப் போரில் சுமார் இரண்டறை லட்சம் மக்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் உயிர்களின் தியாகம் ஸ்ரீலங்கா அரசின் மாவட்ட சபைக்காக அல்ல என்பதை ஸ்ரீலங்கா அரசும் தமிழ் தரப்புக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தமது தேசத்தின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் ஆயுதப் போராட்டம் செய்த நிலையில் தமிழர்களின் தேசம் மீது ஸ்ரீலங்கா அரசும் அதனுடன் இணைந்த நாடுகளும் கூட்டு இராணுவ நடவடிக்கை வாயிலாக போர் தொடுத்து தேசத்தை சிதைத்தது. இந்த நிலையில் 2009இற்குப் பிறகான பதின்மூன்று ஆண்டுகாலத்தில் எந்த விதமான தீர்வையும் வழங்காமல் காலத்தை இழுத்தடித்து வருகிறது சிங்கள தேசம்.
மாவட்ட சபை என்பது
ஸ்ரீலங்கா அரசு இன்று முன்வைத்துள்ள மாவட்ட சபை என்பது 1981இல் உருவாக்கப்பட்டது. அன்றைய சூழலில் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என்று தமிழ் தலைமைகள் உறுதி கொண்ட நிலையில் அதலிருந்து திசை திருப்ப அன்றைய அரசால் மாவட்ட சபை கொண்டுவரப்பட்டது. ஈழத் தமிழ் தரப்பை முதன் முதலில் தோற்கடிக்க பயன்படுத்திய அரசியல் உத்தியாக கருதப்பட்ட மாவட்ட சபை தமிழர்களுக்கு பெருந்தோல்வியை ஏற்படுத்தியதும், தமிழ் மக்களை ஆயுதத்தை இறுகப் பற்ற வைக்கவும் காரணமானது.
1981இல் மாவட்ட சபைத் தேர்தலில் தமிழர் தரப்பு போட்டியிட்டு பெருவாரியான வெற்றியை தமதாக்கிய போதும் ஸ்ரீலங்கா அரசு வாக்குறுதி அளித்தபடி மாவட்ட சபைகளுக்கு எந்தவிதமான அதிகாரத்தையும் அரசு வழங்கவில்லை என்றும் மாவட்ட சபைக்கு கதிரை, மேசை வாங்கக்கூட அதிகாரம் இல்லை என்றும் கூறி அன்றைய மாவட்ட சபை உறுப்பினர் செனட்டர் நடராஜா தனது பதவியை ராஜினாமாச் செய்தமை குறிப்பிடத்தக்கது. இதுவே ஸ்ரீலங்கா அரசின் மாவட்ட சபையின் வரலாறு ஆகும்.
சேடமிழுக்கும் 13
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசு கூறி வந்த நிலையில் சில தமிழ் அரசியல் தரப்பும் 13இற்காக ஒற்றைக் காலில் நின்றும் வருகின்றனர். இந்திய அரசாங்கத்தின் இணைவுடன் கொண்டுவரப்பட்ட 13 குறையளவில் நடைமுறையில் உள்ள நிலையில்தான் சீனா மன்னாருக்கு வந்து “எவ்வளவு தூரத்தில் இந்தியா” எனக் கேட்கும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன் 13 நடைமுறையில் உள்ள காலத்தில் தான் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். ஒற்றையாட்சியின் கீழ் பிறந்த 13ஆவது திருத்தம் ஈழத் தமிழர்களுக்கும் பாதுகாப்பல்ல, இந்தியாவுக்கும் பாதுகாப்பல்ல. ஸ்ரீலங்கா அரசின் பௌத்த சிங்களப் பேரினவாத்தையும் அதன் வழியாக ஈழத் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்படும் இனவழிப்பையும் பாதுகாப்பதுடன் சீனா போன்ற நாடுகள் தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவவும் 13 வழிகோலியுள்ளது.
நரியுடன் கூட்டமைப்பு
நாயுடன் சேர்ந்தால் உண்ணியாவது மிஞ்சும் நரியுடன் சேர்ந்தால் எதுவும் மிஞ்சாது என்பதற்கமைய இப்போதே ரணில் எனும் நரி தந்திர வேலைகளை துவங்கிள்ளது. முதலில் வடக்கு கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வடக்கு எனச் சுருக்கும் தந்திரத்தில் ரணில் எனும் நரி ஈடுபட்டது. இதற்கு எடுபட்டு சுமந்திரனும் வடக்கின் பிரச்சினையை ரணில் தீர்ப்பார் என தமிழர் தாயகத்தை சுருக்கிப் பேசி நரியின் தந்திரத்தில் வீழ்ந்து கொண்டார்.
கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தந்திர வலைக்குள் வீழ்த்தி அவர்களுக்கு நலன்களை அள்ளிக் கொடுத்து, சர்வதேச மட்டத்தில் இனப்படுகொலையாளிகளுக்கு பிணையெடுப்பு செய்ததுடன் சர்வதேத்தின் நிதிசார் நலன்களையும் கூட்டமைப்பை பயன்படுத்தி ரணில் பெற்றார். இதனால் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டதுடன் பல ஆண்டுகள் மக்களின் போராட்டம் பின்தள்ளப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது.
வேண்டும் சுய நிர்ணய உரிமை
தற்போது ஸ்ரீலங்கா அரசு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், தமிழர்களுக்கு விரைவில் தீர்வு என்றும் வரும் ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தின் முன் வெட்டி வீழ்த்துவேன் என்றும் பேசியுள்ள ரணில் மாவட்ட சபை தீர்வை முன்வைக்க முனைகின்றார். 1981இல் அன்றைய தமிழர் தரப்பை ஏமாற்றியது போல இன்றைய தமிழர் தரப்பை ஏமாற்ற ரணில் அரசு முனைகிறது. ஆனால் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு எல்லாம் அறிந்தே நரியின் கூட்டாளி நரிகளாக களமிறங்கி தமிழர்களை தோற்கடிக்கிறது.
ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்பு மற்றும் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தனிநாட்டுத் தீர்வே தீர்வும் கனவும் இலட்சியமும் என்று மாவீரர்கள் களமாடி மாண்டார்கள். சுயநிர்ணய உரிமை கொண்ட தேசத்தில் ஈழ மக்கள் வாழ வேண்டும் என்பதே மாவீரர்களினதும் போரில் காவு கொள்ளப்பட்ட மக்களினதும் குறைந்தபட்சக் கோரிக்கையாக உள்ளது. எனவே தமிழர் தேசம் தன்னை தான் ஆளும் சுயநிர்ணய உரிமை கொண்ட சமஷ்டி அரசியல் தீர்வை ஸ்ரீலங்கா அரசு வழங்க உலகம் வழி செய்ய வேண்டும். அதற்கான வழிகளை கண்டுபிடிக்க தமிழ் அரசியல் தரப்புக்கள் உழைக்க வேண்டும்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.