எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை தவறவிட்டாலும் ஜனவரி மாதம் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இருதரப்பு கடன் வழங்குனர்களை முன்னிறுத்தி கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டை வைத்து இந்தப் பொருளாதாரச் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகின்றார்.
மேலும், கடந்த சில நாட்களில் வெளியான சில ஊடகச் செய்திகளை நிராகரித்த அவர், டிசம்பர் இலக்கை தவறவிட்டால், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற தகவலில் உண்மையில்லை என மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சபைக் கூட்டங்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது நடைபெறுவதாகவும், அவற்றின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் உள்ளதாகவும், இதனால் டிசம்பர் இலக்கை தவறவிடுவது பெரிய விடயமல்ல எனவும் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.