இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ஆக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று (25) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் நியூஸிலாந்து அமோக வெற்றிபெற்றது.
டொம் லெதம் குவித்த அபார சதமும் கேன் வில்லியம்சன் பெற்ற அரைச் சதமும் நியூஸிலாந்தை வெற்றி அடையச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைக் குவித்தது.
ஷிக்கர் தவான் (13 பவுண்டறிகளுடன் 72 ஓட்டங்கள்), ஷுப்மான் கில் (3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 50 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 124 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால் இருவரும் அதே மொத்த எண்க்கையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரிஷாப் பன்ட் (15), சூரியகுமார் யாதவ் (4) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றனர்.
எனினும் ஷ்ரேயாஸ் ஐயரும் சஞ்சு செம்சனும் 5ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஐயர் 4 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் அடங்கலாக 80 ஓட்டங்களையும் சஞ்சு செம்சன் 36 ஓட்டங்களையும் பெற்றனர். வொஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் லொக்கி பேர்குசன் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
307 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 47.1 ஓவர்களில் 3 விக்கெடக்ளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.
நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையாதபோதிலும் கேன் வில்லியம்சனும் டொம் லெதமும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 221 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.
நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் டொம் லெதம் 19 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 145 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன் ? பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 94 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பின் அலன் (22), டெவன் கொன்வே (24), டெரில் மிச்செல் (11) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இந்திய பந்துவீச்சில் உம்ரன் மாலிக் 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.