இலங்கையில் 10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோர் எதிர்காலத்தில் தற்கொலையில் ஈடுபடும் நிலை ஒன்று உருவாகிக்கொண்டு இருப்பதாக சிறுவர் உளவியல் ஆலோசகர் சந்திரா ஜி கிரின்கொட அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தை தூண்டும் ஒரு கும்பல் நாடளாவிய ரீதியிலும் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது வரை பலரையும் இரையாக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கையடக்கத் தொலைப்பேசி பாவனை

அவர் மேலும் கூறுகையில், கையடக்கத் தொலைப்பேசியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் இந்த நிலை உருவாகியுள்ளது. கேம்கள் (Game)மற்றும் பிழையான தொடர்புகள் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கையடக்கத் தொலைப்பேசிக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 15 சிறுவர்கள் சிகிச்சைக்காக என்னை தொடர்பு கொள்கின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவன்

சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த 15 வயதான சிறுவன் ஒருவன் இவ்வாறு கூறினான் “நான் கேம் (Game) விளையாடுகின்றேன். என்னால் அதனை நிறுத்திக்கொள்ள முடியவில்லை.
இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரையில் நான் கேம் விளையாடுவேன். பாடசாலைக்கு செல்ல விருப்பமில்லை. பாடசாலைக்கு சென்றாலும் கல்வி கற்க முடியவில்லை. எனது நண்பர் ஒருவர் இந்த கேமை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அந்த கேமில் அங்கத்தவராக பதிவு செய்வதற்கு கண்ணாடி துண்டால் என் கையை வெட்டி அதை புகைப்படம் எடுத்து பதிவிடுமாறு கூறினார்கள். நான் அதை செய்து அந்த கேமில் இணைந்துக் கொண்டேன்.
அன்றிலிருந்து தொடர்ச்சியாக கேம் விளையாடினேன். ஒருநாள் என்னை தற்கொலை செய்துக்கொள்ளுமாறு கூறினார்கள். நான் சில மாத்திரைகளை உட்கொண்டேன் ஆனாலும் நான் சாகவில்லை. எனது நண்பர்கள் அனைவரும் இந்த கேம் விளையாடுகின்றார்கள்.
அச்சுறுத்தல்
கேம் விளையாட வேண்டாம் என எனது தந்தை கூறினார் அந்த சந்தர்ப்பத்தில் எனது தந்தையை அடிக்க வேண்டும் போல் எனக்கு தோன்றியது. பின்னர் நான் பயன்படுத்திய கையடக்கத் தொலைப்பேசியை எனது மாமா எடுத்துவிட்டார். அப்போது அந்த குழுவினர் எனது வீட்டிற்கு என்னை தேடி வந்தார்கள்.
எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள். இந்த கேமை நிறுத்துவதென்றால் குறித்த கையடக்கத் தொலைப்பேசியை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் இல்லாவிட்டால் என்னை கொன்று விடுவதாக அச்சுறுத்தினார்கள்” என குறிப்பிட்டார்.
அதனை தவிர குறித்த சிறுவன் வேறு எதுவும் கூறவில்லை என சிறுவர் உளவியல் ஆலோசகரான சந்திரா ஜி கிரின்கொட தெரிவித்துள்ளார்.
பிழையான தொடர்புகள்

அத்துடன் “கையடக்கத் தொலைப்பேசிகளை பயன்படுத்தும் மாணவிகள் பிழையான உறவுகளுடன் தொடர்புகொண்டு குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். பிழையான தொடர்புகள் குறித்து வீடுகளில் கண்டிக்கும் போது தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
முறையற்ற கையடக்கத் தொலைப்பேசி பயன்பாட்டினால் இந்த நிலை உருவாகியிருக்கின்றது. இவ்வாறான விடயங்களை பெற்றோர்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து பிள்ளைகளை விடுவிக்க அன்பான முறையில் பிள்ளைகளை அணுக வேண்டும். பெற்றோரால் சமாளிக்க முடியாத ஒரு நிலை உருவாகினால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.