தென் ஆபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அர்ஷ்தீப் சிங்கின் துல்லியமான பந்துவீச்சு, கே.எல். ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதங்கள் என்பன இந்தியாவுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஓட்டம் பெறாமல் 3ஆவது ஓவரிலும் விராத் கோஹ்லி 3 ஓட்டங்களுடன் 7ஆவது ஓவரிலும் ஆட்டமிழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், கே.எல். ராகுல், சூரியகுமார் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 63 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை சுலபமாக்கினர்.
கே.எல். ராகுல் 56 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும் சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய ஆரம்ப பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 15 பந்துகளில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
தீப்பக் சஹார், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி ஐவரை ஆட்டமிழக்கச் செய்தனர்.
அணித் தலைவர் டெம்பா பவுமா (0), குவின்டன் டி கொக் (1), ரைலி ருசோவ் (0), டேவிட் மில்லர் (0), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (0) ஆகிய ஐவரும் 3 ஓவர்கள் நிறைவு பெறுவதற்கு முன்னரே களம் விட்டகன்று சென்றனர். அவர்களில் கடைசி மூவரும் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.
எவ்வாறாயினும் ஏய்டன் மார்க்ராம் (25), வெய்ன் பார்னல் (24), கேஷவ் மஹாராஜ் (41) ஆகிய மூவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரக்காவை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.
இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷல் பட்டேல் 26 ஓட்டங்களுக்கு 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.