கொழும்பிலுள்ள அமெரிக்க மத்திய நிலையம் (American Center) புதிய அமெரிக்க தூதரக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்காக இன்று மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள புதிய சீரமைக்கப்பட்ட அமெரிக்க மத்திய நிலையமானது அதன் நூலகப் புரவலர்கள், இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் கடந்த கால நிகழ்ச்சிகளில் பங்குபற்றியோர், தற்போதைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளர்கள் ஆகியோரை வரவழைத்து ஒரு வண்ணமயமான திறப்பு விழாவினை நடாத்தியது.
கொழும்பிலுள்ள புதிய அமெரிக்க மத்தியநிலையமானது, எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்குத் தேவையான திறன்களை இலங்கை இளைஞர்களுக்கு வழங்கும் ஒரு நோக்குடன், நூலகம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடமாகத் திகழ்வதிலிருந்து, ஒண்றிணைந்து கற்றல் மற்றும் டிஜிட்டல் ஈடுபாட்டிற்கான இடமாகவும், மெய்நிலை நிதர்சனம் (virtual reality) மற்றும் 3D அச்சுப்பதிப்பு போன்ற தொழில்நுட்பங்களுக்கான ஒரு மிகநவீன அமைவிடமாகவும் திகழ்வதில் தனது முதன்மைக் கவனத்தை மாற்றியது.
அமெரிக்க மத்தியநிலையமானது ஆங்கில மொழிப் பயிற்சி, மேடைப் பேச்சு, தொழில்முனைவு அபிவிருத்தி, குறியீட்டு முறை, இணையத்தள விருத்தி, ஊடக அறிவாற்றல், விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் (STEAM) ஆகியவற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை தொடர்ந்தும் இலவசமாக நடத்தும். இலங்கையின் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அமெரிக்காவின் நண்பர்களுக்கு தகவல்களை அணுகக்கூடிய, கருத்துக்களை வௌியிடுவதற்கான சுதந்திரம் கொண்டாடப்படும் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை ஆதரிக்கும் ஒரு இடத்தினை அது தொடர்ந்து வழங்கும்.
இந்த கொண்டாட்டத்தில் இணைந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், அமெரிக்க மத்தியநிலையத்தின் புரவலர்களுடன் உரையாடியதுடன் பின்வருமாறு கருத்துரைத்தார். “பெரும்பாலும் மெய்நிகர் நிகழ்ச்சிகளை நடாத்திய மூன்று வருடங்களுக்குப் பின்னர், இந்த அழகான, நவீன இடத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் பாரம்பரியத்தைத் தொடர முடிந்ததையிட்டு நானும் எனது குழுவும் பெருமையடைகிறோம்.
வரவிருக்கும் வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் கனவுகள், நிகழ்ச்சிகள் மற்றும் மனநிறைவான எதிர்காலம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக புதிய மற்றும் பழைய நண்பர்கள் இவ்விடத்தில் ஒன்றிணைவதை நாம் காண்போம் என நம்புகிறேன்.
“அமெரிக்காவும் இலங்கையும் பல பொதுவான விழுமியங்கள் மற்றும் அதிகளவு பொதுவான வரலாற்றினைக் கொண்ட நண்பர்கள் மற்றும் பங்காளர்கள் என நான் அடிக்கடி கூறுவேன்.” எனக்கூறிய தூதூவர் சங், “இது அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு சவாலான தருணம், எனினும் இலங்கை மக்கள், இருதரப்பு உறவின் முக்கியத்துவம் மற்றும் எமது இரு நாடுகளுக்கும் பொதுவான எதிர்காலம் ஆகியவற்றில் முதலீடு செய்வதை அமெரிக்கா தொடர்கிறது. அந்த பங்காண்மைக்கும், நட்புக்கும், மற்றும் எதிர்கால முதலீட்டிற்கும் இந்நூலகம் ஒரு சிறந்த உதாரணமாகும்!”
தனது 73 வருட வரலாற்றில், அமெரிக்காவைப்பற்றியும் அதற்கு அப்பாலும் தகவல்களைத் தேடும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அமெரிக்க மத்தியநிலையம் வரவேற்றுள்ளது. இலக்கம் 44 காலி வீதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ரம்யாவிற்கு இடமாற்றப்படுவதற்கு முன்னர் அமெரிக்க மத்தியநிலையமானது முதன்முதலில் மலர் வீதியிலுள்ள Galle Face Court இல் அமைந்திருந்தது. காலப்போக்கில், கொழும்பிலுள்ள அமெரிக்க மத்தியநிலையத்தினால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகளின் விரிவாக்கத்தின் காரணமாக, மத்தியநிலையமானது புதிய அமெரிக்க தூதரக வளாகத்திலுள்ள அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.