அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வெள்ளிக்கிழமை (23) 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட 2ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டிய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 – 1 என சமப்படுத்திக்கொண்டது.
மழை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இப் போட்டியை அணிக்கு 8 ஓவர்களாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அப் போட்டியில் அக்சார் பட்டேலின் துல்லியமான பந்துவீச்சு, ரோஹித் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் என்பன இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.
அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 91 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 7.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டிது.
ஆரம்ப வீரர்களான கே. எல். ராகுல் (10). ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 17 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ராகுலின் விக்கெட்டை நேரடியாக பதம் பார்த்த அடம் ஸ்ம்ப்பா, மொத்த எண்ணிக்கை 55 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி (11), சூரியகுமார் யாதவ் (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் களம் விட்டகலச் செய்தார்.
ரோஹித் ஷர்மாவுடன் 4ஆவது விக்கெட்டில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹார்திக் பாண்டியா 9 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
ஆனால், அடுத்த 3 பந்துகளில் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 15 ஓட்டங்களை ரோஹித் ஷர்மாவும் தினேஷ் கார்த்திக்கும் பெற்றுக் கொடுத்தனர்.
ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் தலா 4 சிக்ஸ்கள், பவுண்டறிகள் உட்பட 46 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் 10 ஓட்டங்களுட னும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 8 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைக் குவித்தது.
ஹார்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் அவுஸ்திரேலியா 10 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால் 2ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட அக்சார் பட்டேல் தனது 3ஆவது பந்தில் கெமரன் க்றீனையும் (5), 6ஆவது பந்தில் க்ளென் மெக்ஸ்வெலையும் (0) ஆட்டம் இழக்கச் செய்தார். (19 – 2 விக்.)
அக்சார் பட்டேல் தனது 2ஆவது ஓவரின் முதல் பந்தில் டிம் டேவிட்டின் (2) விக்கெட்டையும் வீழ்த்த அவுஸ்திரேலியா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்ற ஆரோன் பின்ச்சின் விக்கெட்டை ஜஸ்ப்ரிட் பும்ரா வீழ்த்தினார். (46 – 4 விக்.)
அதனைத் தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மெத்யூ வேட் 5ஆவது விக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்துடன் (8) 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 90 ஓட்டங்களாக உயர்த்தினார்.
மெத்யூ வேட் 20 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை விளாசி 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இந்திய பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியுமான போட்டி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெறவுள்ளது.