உண்மை எப்போதும் வெளியே வராமல் இருந்ததே இல்லை. ராஜபக்சர்கள் குறித்து விரைவிலேயே உண்மைகள் அனைத்தும் வெளிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது முதற்தடவையாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளமை” குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விக்னேஷ்வரன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தினை தான் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் வெளிவரும் உண்மைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ராஜபக்சர்களும், அவர்களைச் சார்ந்தோரும் பொருளாதாரக் குற்றங்களைப் புரியவு அவர்களின் பாதுகாப்பு போர்வையாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற கோஷத்தை எழுப்பினார்கள் என்பது தெரியவரும்.
அதாவது இன ரீதியாக சிங்கள மக்களின் மனங்களை தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராகத் திருப்பிவிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிராகப் பொருளாதாரக் குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டிருந்தமை விரைவில் வெளிவரும்.
அத்திவாரமிட்ட அரகலய
தெருவில் போகும் பிச்சைக்காரனைக் குறிப்பிட்டுக் காட்டி, பயங்காட்டி, குழந்தைக்கு தாய் உணவு கொடுப்பது போல நாட்டின் மக்கள் பிரிவினர் சிலரைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துப், பயம் காட்டி தமது ஊழல் கைவரிசையை, மேற்கூறிய சிங்கள அரசியல்வாதிகள் இதுவரை சாதித்து வந்தமை விரைவில் அம்பலப்படுத்தப்பட இருக்கின்றது.
அரகலயதான் அதற்கு முதலில் அத்திவாரம் இட்டது என குறிப்பிட்டுள்ளார்.