குருந்தூர் மலை பகுதியில் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு முயற்சி அமைச்சரின் உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “குருந்தூர் மலையில் வரையறுக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன.
அந்த விடயத்தை நான் நேரில் சென்று பார்த்து அங்கிருந்து அமைச்சரிடம் கதைத்த போது புதிதாக அளவீடு செய்ய முற்படுகிறார்கள் என தெரிவித்திருந்தேன். எனினும் அப்படியெதுவும் இல்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நான் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ள விடயத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு கடிதமொன்றையும் கொண்டு வந்தேன். எனினும் அதற்கு இடையில் எல்லைக்கற்கள் போடப்பட்ட இடத்தை அளவீடு செய்து தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருந்த அளவீட்டு நடவடிக்கை
அதன்படி நாளை காலை பத்து மணிக்கு அளவீட்டு நடவடிக்கைளை மேற்கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயகவை கண்டு கதைத்து கடிதமொன்றை கையளித்தேன்.
அத்துடன் தொல்பொருள் வரைக்கு உட்பட்ட பிரதேசத்தை விட மேலதிகமாக மக்களின் விவசாய காணிகளை கைப்பற்ற முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியிருந்தேன்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதனையடுத்து அவர் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு பணிப்பாளரிடம் அளவீடு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டார்.
அத்துடன் தனக்கு குறித்த விடயம் சம்பந்தமாக அறிக்கையொன்றை சமர்ப்பித்து அனுமதி வழங்கப்பட்டதன் பின் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். இலங்கை நில அளவைத் திணைக்களத்திற்கு அளவீட்டு பணிகளை நிறுத்துமாறு தெரிவித்த உத்தரவு அடங்கிய கடிதமொன்று சென்றுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.