துபாய்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. இந்நிலையில் அவர், இடம் பெறாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மகேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், ஐசிசி நிகழ்வில் கூறும்போது, “டி 20 உலகக் கோப்பையை ரவீந்திர ஜடேஜா இல்லாமல் எதிர்கொள்வது சவால்தான். இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் 5-வது இடத்தில் ஜடேஜா சரியாக பொருந்தியிருந்தார். அவரும், ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் வரிசையில் முதல் 6 இடங்களில் இருப்பது என்பது இந்திய அணிக்கு அதிக நெகிழ்வு தன்மையை கொடுத்தது.
இந்திய அணிக்கு இது கடினமான ஒன்று, இடது கை பேட்ஸ்மேன் இல்லாதது கவலையாக இருக்கக்கூடும். இதனால் தினேஷ் கார்த்திக்கை தவிர்த்து விட்டு ரிஷப் பந்த்தை பேட்டிங் வரிசையில் 4 அல்லது 5-வது இடத்துக்கு கொண்டுவர யோசிக்கக்கூடும். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்த விஷயங்களை சரிசெய்ய வேண்டும். ஆனாலும் ஜடேஜா இருந்த பார்முக்கு அவர், இல்லாததது இந்திய அணிக்கு பெரிய இழப்புதான்.
அதேவேளையில் விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பதை பார்க்க சிறப்பாக உள்ளது. புத்திசாலித்தனமான வீரர்கள் அனைவரும் உலகக் கோப்பையில் சிறந்த ஃபார்மில் இருக்க வேண்டும், அதுதான் உலகக் கோப்பைக்கும் தகுதியானது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடர் சுவாரசியமானதாக இருக்கும்.
என்னை பொறுத்தவரையில் இந்திய அணி விளையாடும் விதம் சிறப்பாக உள்ளது. செயல், திறமை அனைத்தும் உள்ளது. அவர்களுக்கு பேட்டிங், பந்து வீச்சு மற்றும் களத்தில் செயல்படுவதில் சிறிது நம்பிக்கை தேவை. இவை இந்தியா மேம்படுத்த விரும்பக்கூடிய சிறிய விஷயங்களாகும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்த முடியும், திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பெற வேண்டும்.
ஆசிய கோப்பையில் பந்து வீச்சில் இந்தியா தேக்கம் கண்டதற்கு ஜஸ்பிரீத் பும்ராஇல்லாததும் ஒரு காரணம். புதிய பந்திலும், இறுதிக்கட்ட பந்து வீச்சிலும் ஒரு பெரிய இடைவெளியை நிரப்புவார். அவர், அணிக்கு திரும்பி இருப்பதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சுத் துறை செட்டிலாகிவிடும்” என்றார்.