வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிப்போரை வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக இன்று (16) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் நபர் ஒருவர் கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை வெளிநாடு அனுப்புவதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 10 ஆம் திகதி 12 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
அதனை அண்மித்த காலப்பகுயில் கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். வெளிநாடு அனுப்புவதாக குறித்த இருவரிடமும் பணத்தைப் பெற்ற போதும் அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்பாது, பணத்தையும் வழங்காது குறித்த நபர் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட இருவரும் கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், வவுனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி குறித்த நபரால் 32 இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது. அவர்களையும் வெளிநாடு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, பணத்தை பெற்றுக் கொண்ட நபர் ஒளித்து திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வரும் 49 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.