கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றுவரும் 6 நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்ட தெற்காசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நேபாளமும் இந்தியாவும் தகுதிபெற்றன.
இலங்கையை 2ஆவது அரை இறுதியில் 6 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நேபாளமும் பங்களாதேஷை முதலாவது அரை இறுதியில் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றிகொண்டு புதன்கிழமை (14) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.
இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக நேபாளம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.
திங்கட்கிழமை (12) இரவு மின்னொளியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 2ஆவது அரை இறதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய நேபாளம் 6 – 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. இந்த சுற்றுப் போட்டியில் ஓர் அணியினால் போடப்பட்ட அதி கூடிய கோல் எண்ணிக்கை இதுவாகும்.
போட்டியின் 21ஆவது நிமிடம்வரை இரண்டு அணிகளும் கோல்கள் போட்டிருக்கவில்லை.
போட்டியின் 22ஆவது நிமிடத்தில் இலங்கை கோல் எல்லையில் பின்கள வீரர் மொஹமத் அப்துல்லா இழைத்த தவறு காரணமாக நேபாளத்திற்கு மத்தியஸ்தர் பெனல்டி வழங்கினார். அந்த பெனல்டியை அணித் தலைவர் பிரசாந்த் லக்சாம் கோலாக்கி நேபாளத்தை முன்னிலையில் இட்டார்.
24ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லை விளிம்பிலிருந்து ஹரிஸ் ராஜ் பாட்டா பலமாக பந்தை உதைத்து நேபாளத்தின் 2ஆவது கோலைப் போட்டார்.
7 நிமிடங்கள் கழித்து பெனல்டி எல்லைக்குள்ளிருந்து நேபாளத்தின் 3ஆவது கோலை சுபாஷ் பாம் போட்டார்.
போட்டியின் 38ஆவது நிமிடத்தில் முன்னோக்கி நகர்ந்த இலங்கை கோல்காப்பாளர் மொஹமத் ரிஹாசை கடந்து பந்தை நகர்த்திச் சென்ற நிராஜ் கார்க்கி தனது அணியின் 4ஆவது கோலைப் போட்டார்.
இடைவேளையின்போது நேபாளம் 4 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளை முடிந்து 52ஆவது நிமிடத்தில் இலங்கை கோல்காப்பாளரின் கைகளில் பட்டு முன்னோக்கி வந்த பந்தை மிக இலகுவாக நேபாள வீரர் உனேஷ் புடாதோக்கி கோலாக்கினார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளினதும் வீரர்கள் களைப்புற்றவர்களாக அடிக்கடி உபாதையினால் தவித்தார்கள். எவ்வாறாயினும் தனது கோல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நேபாளம் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருந்தது.
இதன் பலனாக 90ஆவது நிமிடத்தில் சிஜல் ராய் போட்ட கோல் நேபாளத்திற்கு 6 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.
பங்களாதேஷை வெளியேற்றியது இந்தியா
முன்னதாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 2 – 1 என்ற கோல்கள் கணக்கல் வெற்றிபெற்ற இந்தியா, இறுதி ஆட்டத்திற்கு வரக்கூடிய அணி என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷை வெளியேற்றியது.
இந்த போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளாலும் கோல் போட முடியாமல் போனது.
இடைவேளையின் பின்னர் கொல் போடுவதற்கான முயற்சியில் இறங்கிய இந்தியா 7 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்டு முன்னிலை பெற்றது.
போட்டியின் 51ஆவது நிமிடத்தில் நேபாளத்தின் பெனல்டி எல்லையின் விளிம்பலிருந்து தங்கல்சூன் கங்டே முதலாவது கோலைப் போட்டு இந்தியாவை முன்னிலையில் இட்டார்.
6 நிமிடங்கள் கழித்து சுமார் 60 யார் தூரத்திற்கு தனியாக பந்தை நகர்த்திச் சென்ற மத்திய கள வீரர் தாமி பரமாறிய பந்தை கங்டே மிக இலாவகமாக கோலினுள் புகுத்தினார்.
எனினும் 61ஆவது நிமிடத்தில் நேபாளத்திற்கு கிடைத்த பெனல்டியை மிராஜுல் இஸ்லாம் கோலாக்கினார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் மேலதிக கோல் போடாத நிலையில் இந்தியா வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.