ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமான செயற்பட்டு ரீதியான நோக்கை கொண்ட நாட்டுக்கு அவசியமான தலைவர் என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்து காட்டியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கைத்தொழில் ராஜாங்க அமைச்சராக கடமைகளை ஆரம்பிக்கும் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு வங்குரோத்து அடைந்து, நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்து, பொருளாதார புயலில் சிக்கி பாதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை மட்டுமே பெற்று மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் 37 பேரும் ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர் என்பதை எதிர்க்கட்சியினர் மறந்து விட்டனர்.
ரணில் விக்ரமசிங்க, வெற்றிகரமான செயற்பட்டு ரீதியான நோக்கத்துடன் கூடிய நாட்டுக்கு அவசியமான தலைவர். அவர் குறுகிய காலத்தில் அதனை சிறப்பாக காட்டியுள்ளார்.
அரசியல் சதித்திட்டதாரிகள் 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் உடன்பாடுகளை ஏற்படுத்தி, வடக்கில் வாக்களிப்பை தடுக்காமல் இருந்திருந்தால்,2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியானது.
அவர் அன்று ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தால், இலங்கை உலகில் மிகவும் முன்னேறிய பலமிக்க நாடாக மாறியிருக்கும்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவார் என ஐக்கிய மக்கள் சக்தியினர் பகல் கனவு காண்கின்றனர்.
எனினும் 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், குழு நிலை விவாதத்தில் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டு காலம் முடியும் முன்னர் கலைக்க முடியாது என்ற ஷரத்தை உள்ளடக்க போவதாக ஜனாதிபதி எமது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு மரியாதைக்குரிய தலைவர்.அவர் ஜனாதிபதியான பின்னர் உலகில் நாலாபுறங்களில் இருந்தும் நாட்டுக்கு உதவிகள் குவிய ஆரம்பித்தன.
2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு. நிமல் சிறிபால டி சில்வா போன்ற ஒருவர் எமது சுதந்திரக் கட்சியின் தலைவராக வரவேண்டும்.
தயாசிறியும் அமரவீரவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை முயற்சிக்கின்றனர் என்றால், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க அரசியல் முதிர்ச்சியும் கல்வித் தகுதியும் மிக முக்கியம் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.