புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்டோரிடம் ஒத்துழைப்பை பெறும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளார்.
புலம்பெயர் நிதியம்
அதன்படி புலம்பெயர் நிதியமொன்று (diaspora fund) நிறுவ அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருங்கிணைப்பு மையமொன்றாக தொழிற்படுகின்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகமொன்றினை தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன்.
இந்த அலுவலகமானது உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற இலங்கையர்களின் பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கியிருக்கும்.
புலம்பெயர் நிதியத்தின் பிரதான பணி
முதலீடுகளை கவருதல், சுற்றுலாத்துறையினை ஊக்குவித்தல் மற்றும் அதனை ஒத்த விடயங்களை ஒருங்கிணைப்பது இதன் பிரதான பணியாகும். இதற்காக வெளிநாட்டு இலங்கையர்களின் நிதியம் ஒன்றும் தாபிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக அங்கு வதிகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் போன்ற அனைத்து இலங்கையர்களினதும் ஒத்துழைப்பினைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.