பாராளுமன்ற குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரச கொள்கையாகப் பயன்படுத்துவதை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு திங்கட்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவைத் தவிர வேறு உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றியிருக்கவில்லை.
பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரையின் போது , சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய , கடந்த 5 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சி தலைவர்கள் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்றைய தினம் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது.
அதற்கமைய ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில் , ‘நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியான சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது பாராளுமன்ற குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் , அரச கொள்கையாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முற்றாக எதிர்ப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தினோம்.’ என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை இந்த சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்ற முறைமையின் கீழ் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்கத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தற்போது அமைச்சுப்பதவிகள் நாட்டுக்கு சுமையாகியுள்ளதாகவும் , மக்கள் பதவிகளுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுபுறம் அரசாங்கத்தின் பதவிகளை ஏற்றுக்கொண்டால் அதனை விமர்சிக்க முடியாது எனவும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது