ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஆகிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் உபாதை காரணமாக மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதை காரணமாக இலங்கை குழாத்தில் இடம்பெறமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருவரைத் தவிர அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை குழாம் செல்லவுள்ளது.
ஏற்கனவே பினுர பெர்னாண்டோ, கசுன் ராஜித்த ஆகியோர் உபாதை காரணமாக குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் தற்போது துஷ்மன்த சமீரவும் உபாதை காரணமாக அணியிலிருந்து நீங்க நேரிட்டுள்ளது.
அசித்த பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான், நுவன் துஷார ஆகியோர் பதில் வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்களில் அசித்த பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் நுவன் துஷாரவுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை விளையாடாமல் இருக்கும் அசித்த பெர்னாண்டோ, ஆசிய கிண்ண கிரிக்கெட் மூலம் இருபது 20 அரங்கில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாமிக்க கருணாரட்னவுடன் அவர் வேகப்பந்துவீச்சில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.
அறிமுக வீரர்களாக டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண ஆகியோர் குழாத்தில் இடம்பெறுகின்றபோதிலும் அவர்கள் இறுதி அணியில் இடம்பெறுவது உறுதி இல்லை.
மத்திய வரிசை வீரர் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை குழாத்தில் தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் காப்பாளர்) ஆகியோர் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
இவர்களை விட தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களாகவும் சரித் அசலன்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் சிறப்பு துடுப்பாட்ட வீரர்களாகவும் தனஞ்சய டி சில்வா துடப்பாட்ட சகலதுறை வீரராகவும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரில் இருவர் அல்லது மூவருக்கே இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறக்கூடியதாக இருக்கும்.
சுழல்பந்துவீச்சாளர்காக வனிந்த ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டர்சே, ப்ரவீன் ஜயவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கை இடம்பெறுகிறது.
ஆகிய கிண்ண ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷை எதிர்வரும் சனிக்கிழமை (27) இலங்கை எதிர்த்தாடும்.
ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தானுடன் தகுதிகான் அணி இணையும்.
ஓமானில் நேற்று ஆரம்பமான தகுதிகாண் சுற்றில் ஹொங் கொங், குவைத், சிங்கப்பூர், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நான்கு நாடுகள் விளையாடுகின்றன. இதில் முதலிடத்தைப் பெறும் அணி ஏ குழுவில் இணையும்.
முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்கைளைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் ஆசிய கிண்ணத்துக்காக போட்டியிடும்.
சுப்பர் 4 சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.