மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி) போட்டிகளில் பங்குபற்றுவதற்கு திருமணமான மற்றும் குழந்தை பெற்ற பெண்களையும் அடுத்த வருடம் முதல் அனுமதிப்பதற்கு அப்போட்டி ஏற்பாட்டளர்கள் தீர்மானித்துள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானமாக இது கருதப்படுகிறது.
உலக அழகுராணி (மிஸ் வேர்ல்ட்) போட்டிகளுடன் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற அழகுராணி போட்டியாக மிஸ் யூனிவர்ஸ் போட்டி விளங்குகிறது. 70 ஆவது மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டி கடந்த வருடம் இஸ்ரேலில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து முதலிடம் பெற்றிருந்தார்.
1952 ஆம் ஆண்டு இப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதுவரை திருமணமாகாத பெண்கள் மாத்திரமே மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இப்போட்டியாளர்கள், திருமணமாகாதவர்களாகவும் குழந்தை பெறாதவர்களாகவும் 18 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டோராகவும் இருக்க வேண்டும் என்பது இப்போட்டியாளர்களான முக்கிய நிபந்தனையாக உள்ளது.
அத்துடன் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக தெரிவு செய்யப்படுவர்கள் ஒரு வருட காலத்துக்குள் திருமணம் செய்யவோ குழந்தை பெறவோ கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள 71 ஆவது மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் இவ்விதிகள் பின்பற்றப்படவுள்ளன.
ஆனால், 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 72 ஆவது மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளிலிருந்து திருமணமான பெண்கள், குழந்தை பெற்ற பெண்களையும் போட்டியாளர்களாக இணைத்துக்கொள்ள மிஸ் யூனிவர்ஸ் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இப்போட்டி ஏற்பாட்டாளர்களின் உள்ளக அறிக்கை ஒன்றில், ‘பெண்கள் தமது வாழ்க்கை தொடர்பான செயலாண்மையைக் கொண்டிருக்க வேண்டும். மனிதர்களின் வெற்றிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட தீர்மானங்கள் தடையாக இருக்கக்கூடாது எனக் கருதுகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்ட, மெக்ஸிகோவைச் சேர்ந்த அண்ட்றியா மேஸா இது தொடர்பாக கூறுகையில், ‘இவ்விடயம் யதார்த்தமாவதை நான் மிகவும் விரும்புகிறேன்.
சமூகம் மாற்றமடைந்து வரும் நிலை யில், முன்னர் ஆண்கள் மாத்திரமே வகிக்கக்கூடிய தலைமைத்துவப் பதவிகளை தற்போது பெண்களும் வகிக்கிறார்கள். அழகுராணி போட்டிகள் மாற்றமடைந்து, குடும்பங்களைக் கொண்ட பெண்களுக்கும் இப்போட்டிகள் திறக்கப்பட வேண்டிய தருணம் இது’ எனக் கூறியுள்ளார்.