பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான டொலர்களில் விற்பனையாகின்றனர். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறியவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டியந்தோட்டை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றனர். அதுவும் ரூபாய்களால் அல்ல. டொலர்களால் விற்பனையாகின்றனர். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் அமைச்சுப்பதவிகள் எதற்கு?
மறைந்திருந்த காகங்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. நாட்டை மீண்டும் குழப்புவது என்று காகங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டில் மீண்டும் காகங்களினதும் , பொதுஜன பெரமுனவினரதும் , ராஜபக்ஷாக்களினதும் ஆட்சிக்கு மக்கள் தயாரா?
அன்று நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்திருந்தால் இன்று இவ்வாறு வீழ்ச்சியடைந்திருக்க வேண்டியேற்பட்டிருக்காது. அதற்கு நாம் இடமளித்திருக்க மாட்டோம். அரசாங்கத்தின் அதிகாரமிக்கவர்கள் தமது சொந்த அதிகார நிகழ்ச்சி நிரலை ஸ்திரப்படுத்தும் வகையில் இத்தருணத்திலும் சர்வகட்சி சூதாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு மக்கள் எவ்வித உதவியும் அற்ற நிலையிலிருக்கும் போது , காகங்கள் அமைச்சுப்பதவியைப் பெற முயற்சிக்கின்றன. நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் இக்கட்டாண ஓர் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ப்பதற்கு சம்பிரதாய எதிர்க்கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பும் பணி தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கவுள்ளோம் என்றார்.