அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவான போது தப்பி ஓடியவர்கள் இப்போது நாங்கள் மீண்டும் வருவோம் என்று மக்களுக்கு சவால் விடுகின்றனர். மக்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை. இன்னும் சிறிது காலத்தில் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் உரையில் ஊழல் தொடர்பில் கடுமையாக எதனையும் கூறவில்லை. நாட்டில் ஊழல் இருப்பதாக மக்களிடையே கதைக்கப்படுவதாக மட்டுமே கூறியுள்ளார். அதேபோன்று பொய்களை சோடிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இப்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி மிகவும் பாரதூரமானது. ஊழல் மிக்க ராஜபக்ஷக்களிநாலும் , அவரை சுற்றியிருந்த ஊழல் மிக்க அதிகாரிகளாலுமே நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தில் இன்னும் நிதி மோசடி நடக்கின்றது. எரிவாயு கப்பல் வரும் வரையில் மக்கள் காத்திருந்தனர். இதன்படி கடனை பெற்று அந்தக் கப்பலை கொண்டு வந்தனர். அதன்போது மெற்றிக் டொன் எரிவாயுக்கு அதிகளவில் டொலர் செலுத்தப்பட்டது. அதனால் 136 கோடி ரூபாவை இழக்க நேரிட்டுள்ளது.
இன்னும் ஊழல் நிறுத்தப்படவில்லை. இப்போது பதவிகள் வழங்கப்படுகின்றன. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவற்றை வழங்குகின்றனர். வாகனங்கள், அலுவலகங்கள் என்பன மக்களின் பணத்திலேயே வழங்கப்படுகின்றன.
இந்த அரசாங்கமும் ராஜபக்ஷ்வினர்களும் எமது உயிரை மாத்திரமன்றி பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சீரழித்துள்ளனர். யுத்தக் காலத்தில் கூட இதுபோன்ற நிலைமை இருக்கவில்லை. அப்போது பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போனார்கள். போக்குவரத்துக்கள் இருந்தன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ராஜபக்ஷ் ஆட்சி பொறுப்பு கூற வேண்டும். மக்களை ஏமாற்றியமையே இதற்கு காரணம்.
அத்துடன் காஸ் வரிசை தற்போது குறைவடைந்துள்ளது. இந்தியாவிடமிருந்து கடனுக்கே அதனை பெற்றுக்கொண்டுள்ளது. மாறாக எமது வருமானத்தில் பெற்றுக்கொள்ளப்படவி்லலை. எரிபொருள் வரிசை இல்லை . ஆனால் மக்களுக்கு தேவையான எரிபொருள் இல்லை. நாட்டில் சிறந்த ஆட்சி ஒன்றை ஏற்படுத்தவே இளைஞர்கள் வீதிக்கிறங்கினர்.
அவர்களின் போராட்டம் காரணமாகவே அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் இந்த போராட்டக்கார்களுடன் மக்கள் இருக்கவேண்டும். போராட்டக்காரர்களை கைதுசெய்வதை, அடக்குவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும். காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியாகிவிட்டாலும் அவர்களின் போராட்டம் உள்ளத்தில் இருக்கின்றது. அதனால் போராட்டம் முடிந்துவிட்டதாக நினைக்கவேண்டாம். அவர்கள் மீண்டும் வேறு முறைகளில் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவான போது தப்பி ஓடியவர்கள் இப்போது நாங்கள் மீண்டும் வருவோம் என்று மக்களுக்கு சவால் விடுகின்றனர். மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதனால் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.