இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
பேர்மிங்ஹாம் கொவென்ட்றி அரினா மல்யுத்த அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஐரின் சிமண்ட்ஸை 10 – 0 என்ற தொழில்நுட்ப புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்ட நெத்மி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
பொதுநலவாய விளையாட்டு விழா மல்யுத்த வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
மிகத் திறமையாகவும் நுட்பத்திறனுடனும் போட்டியிட்ட 18 வயதுடைய நெத்மி, ஐந்து தடவைகள் தலா 2 தொழில்நுட்ப புள்ளிகளைப் பெற்று தனது எதிராளியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மல்யுத்த அணியின் பிரதான பயிற்றுநர் ஒருவர் இல்லாமலே நெத்மி வெற்றிபெற்றமை பாராட்டுக்குரியதாகும்.
மல்யுத்த வீரர்களின் பிரதான பயிற்றுநர் வை.ஆர்.சி. பெர்னாண்டோ எவ்வித அறிவித்தலும் இன்றி திடீரென வெளிநாடு சென்றுவிட்டதால் மல்யுத்த குழாம் பிரதான பயிற்றுநர் இன்றியே இங்கு வருகை தந்தது.
பதில் பயிற்றுநராக செயல்பட்ட என்.கே.ஜே. பியரட்னவை பேர்மிங்ஹாம் அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அவரால் பேர்மிங்ஹாம் வரமுடியமால் போனது.
பயிற்றுநர் இருந்திருந்தால் வீரர்கள் இன்னும் நம்பிக்கையுடன் போட்டியிடக்கூடியதாக இருந்திருக்கும் என விமர்சகர்கள் தெரிவித்தனர்.