ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. காலி முகத்திடல் போராட்டகாரர்கள் யதார்த்த நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டும். தொடர் போராட்டம் நாட்டை பலவீனப்படுத்தும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
காலி முகத்திடல் போராட்டகளம் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாக நாட்டில் என்றுமில்லாத அளவிற்கு போராட்டங்கள் தோற்றம் பெற்றன.
காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தின் காரணமாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார்.
அரசியலமைப்பிற்கு அமைவாகவே பாராளுமன்றத்தின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒரு தரப்பினரும் இணையாத பட்சத்தில் மாற்று வழிமுறைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
அரசாங்கத்தை பொறுப்பேற்பவர்கள் அனைவரையும் ‘கோ ஹோம்’ என குறிப்பிட்டால் நாட்டில் அடுத்தக்கட்ட நிலைமை என்ன என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் நிலையான அரசாங்கம் ஒன்று தோற்றம் பெறாவிடின் எந்த நாடும் எமக்கு உதவி புரியாது.
ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் யதார்த்த நிலையை விளங்கிக்கொள்ள வேண்டும். தொடர் போராட்டங்கள் நாட்டை பலவீனப்படுத்தும் என்பதற்கு பல நாடுகள் உதாரணமாக உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு காலவகாசம் வழங்க வேண்டும். மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள கூடாது என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.