மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள சில நாடுகளில் சமூக பதற்ற நிலைமைகளால் பல ஆண்டுகள் ஸ்திரமற்ற நிலைமையும் , அராஜகதன்மையும் நிலவி வருகின்றன.
அவ்வாறானதொரு நிலைமையை நோக்கி இலங்கை நகராமல் இருப்பதற்கு, சர்வகட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்து புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான ஜனநாயக சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதே போன்று இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது கட்சிகளுடன் இணக்கப்பாடுகளை எட்ட வேண்டுமே தவிர , கட்சிகளிலுள்ள தனித்தனி அரசியல்வாதிகளுடன் அல்ல என்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தற்போதைய ஜனாதிபதி என்ற வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு நீங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்களா என்பதை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல கட்சிகள், பொது மக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அமைப்புக்கள், நிபுணர்கள், தொழிற்துறையினர்கள் நம்ப வேண்டும்.
இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது கட்சிகளுடன் இணக்கப்பாடுகளை எட்ட வேண்டுமே தவிர , கட்சிகளிலுள்ள தனித்தனி அரசியல்வாதிகளுடன் அல்ல என்பது எமது நிலைப்பாடாகும்.
குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை ‘நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கான அமைச்சரவையாக’ வரையறுக்கப்பட்டதாகக் காணப்படுவதோடு , மேற்கூறப்பட்ட அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைய வேண்டும்.
இலங்கையில் எழுந்துள்ள சமகால சமூக பதட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் போன்றே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் பல ஆண்டுகளாக மிகவும் ஸ்திரமற்ற மற்றும் அராஜகமாக நிலைமையில் உள்ளன.
அவ்வாறானதொரு நிலைமையை நோக்கி இலங்கை நகராமல் இருப்பதற்கு, சர்வகட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்து புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான ஜனநாயக சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.
பாராளுமன்றத்தின் ஊடாக நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் , உங்களால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை, அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட ஏனைய நியமனங்கள் மக்கள் , சிவில் அமைப்புக்கள் என்பவை உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளன.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நம்பகமான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்திற்கான முன்மொழிவின் பிரதான காரணியானது, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கொண்ட ‘தேசிய நிர்வாகக் சபையை’ நிறுவுவதாகும்.
நல்லாட்சிக்கான சிவில் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் , சர்வக்கட்சி அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நிலையான கருத்தியல் தொடர்பாடல்களைப் பேணுவதற்கான சிவில் அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், போராட்டக்காரர்கள், தொழிற்சங்கவாதிகள், நிபுணர்களை உள்ளடக்கிய சிவில் ஆலோசனை சபையை நியமிக்க வேண்டும்.
அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்ட கல்விமான்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்ப ஆலோசனை சபைகள் நியமிக்கப்பட வேண்டும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு பகுதிகள் தொடர்பிலும் எமது கட்சியின் தொழில்நுட்ப முன்மொழிவுகளை முன்வைப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.