அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நேற்று (04) இரவு 7 மணியளவில் லேபாயேட் சதுக்கத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
சதுக்கத்தில் அமைந்துள்ள ஜாக்சன் சிலையின் அருகே அவர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தோடு அப்பகுதியில் தீவிர இடி மற்றும் மின்னல் ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து தேசிய மின்னல் அமைப்பு ஆராய்ச்சி குழுவின் நிபுணர் கிரிஸ் வேகாஸ்கி கூறியதாவது
“வெள்ளை மாளிகை அருகே விபத்து ஏற்பட்ட பகுதியில் 6 ஸ்ட்ரோக் மின்னல் தாக்கியுள்ளது. அதாவது அதீத மின்சாரம் ஒரே புள்ளியில் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதுவும் அரை வினாடி பொழுதில் இது நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த விபத்தை ஏற்பட்டது என்று கூறியுள்ளார்”.
இது மட்டுமின்றி அப்பகுதி முழுவதுமே பரவலாக மின்னல் தாக்கி கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக மின்னல் தாக்கி உயிரிழப்போர் 21 பேர் என ஆய்வு அறிக்கை சொல்கிறது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசமான வானிலையால் ஏற்படும் இந்த விபத்து தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. அத்தகைய தருணத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.