இலங்கையில் வாழும் சிறுவர்களின் தேவைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இருப்பினும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போசணை மற்றும் வளர்ச்சி என்பவற்றுக்கு அவசியமான வளங்களைப் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலையிலுள்ளனர் என்று யுனிசெப் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் நெருக்கடி நிலைவரத்தினால் சிறுவர்கள் முகங்கொடுத்திருக்கும் பாதிப்புக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பின் அமெரிக்கக்கிளை, ‘இலங்கையில் வாழும் சிறுவர்களின் தேவைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போசணை மற்றும் வளர்ச்சி என்பவற்றுக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய அவசியமான வளங்களைப் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலையிலுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கிளையும் அரசாங்கமும் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து பணியாற்றிவருகின்றனர்’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கையின் நெருக்கடியானது அதிகரித்த பணவீக்கம் ஏற்படுவதற்கு வழிவகுத்திருப்பதுடன் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தேவபுரத்தைச்சேர்ந்த ஒன்றரை வயதுடைய இரட்டைக்குழந்தைகளின் தாயான கிரிஷாந்தினி என்பவர் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையின் விளைவாக முகங்கொடுத்திருக்கும் பாதிப்புக்கள் தொடர்பிலும் யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள யுனிசெப் இலங்கைக்கிளையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி ரெஃபின்ஸியா பீட்டர்ஸன் கூறியிருப்பதாவது:
இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் நாளொன்றில் மூன்று வேளை உணவைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலிருப்பதுடன் எரிபொருள் தட்டுப்பாடு அவர்களது வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.
இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பிரதானமாக விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகியவற்றில் தங்கியிருக்கும் நிலையில் எரிபொருள் இன்மையால் அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.