இன்னுமொரு கொவிட் அலையை தடுப்பதற்கு ஆகக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முதலாம் இரண்டாம் கொவிட் அலையை எதிர்கொண்டது போல இன்னொரு அலையை எதிர்கொள்வதற்கான பலம் எம்மிடம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுசெயலாளர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் நாட்டை முடக்குவது சாத்தியமில்லை,ஆகவே புதிய அலை உருவாவதை தடுப்பதற்கு பொறுப்புள்ள அதிகாரிகள் பலனளிக்ககூடிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளாந்தம் அறிவிக்கப்படும் எண்ணிக்கைக்கு அப்பால் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது குறைந்தளவு சோதனை வசதிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் போதே நாளாந்தம் 150 நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
புதிய கொவிட் மாறுபாடே பரவிவருகின்றது பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் சுமார் 12 பேருக்கு பரவக்கூடிய தன்மை வாய்ந்தது இந்த புதிய மாறுபாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் ஏனைய டெல்டா மாறுபாடுகளை விட இதன் பரவும் தன்மை அதிகம் என தெரிவித்துள்ள அளுத்கே புதிய தகவல்களின் படி நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமாந்திரமாக உயிரிழப்பும் அதிகரிக்கலாம் என தெரியவருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.