நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் நாளை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கற்பித்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மெய்நிகர் ஊடாக கற்பித்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு ஆகஸ்ட் முதல் எதிர்வரும் நவம்பர் வரை விடுமுறை இன்றி பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கும் , உயர்தர பரீட்சைகளை நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை திங்கட்கிழமை முதல் நவம்பர் மாதம் வரை விடுமுறையின்றி கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
தரம் 1 மற்றும் 2 ஆம் வகுப்புக்களில் முழுமையாக கல்வி கற்காமல் 3 ஆம் தரத்திற்கு செல்லவுள்ள மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பில் மதிப்பீடு செய்து , அவர்களுக்கு எவ்வாறு அடுத்த கட்ட கற்பித்தலை முன்னெடுப்பது என்பது குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
சுசசெரிய பாடசாலை பஸ் சேவைக்கு மேலதிகமாக, ‘பாடசாலை சேவை’ என்ற பெயரில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் , விரைவில் அதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.