தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி மாணவர்கள் மற்றும் தாய்மார்களுக்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான, யுனிசெப் ஸ்ரீலங்கா ( UNICEF Sri Lanka) விசேட நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொழும்பு மாநகர சபை மற்றும் பொது சுகாதார மருத்துவச்சிகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த முயற்சியின் மூலம், நகர்ப்புற ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் மற்றும் அடிப்படைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேலும் பல குடும்பங்கள் சிரமப்படுகின்றனர் என்று யுனிசெப்பின் இலங்கைப் பிரதிநிதி ஏ.ஐ, எம்மா பிரிகாம் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள உணவு பணவீக்கம்
மலிவு விலையில் சத்தான உணவு இல்லாமை, குழந்தைகளுக்கு, குறிப்பாக அவர்களின் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 80 சதவீதத்திற்கும் மேலாக, தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொழும்பு மாநகரப் பகுதியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொண்ட சுமார் 3,000 தாய்மார்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான, உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதிலும், ஆரம்பக் கல்வியை குழந்தையின் வளர்ச்சியில் முக்கியமான முதல் படியாக ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
இலங்கையில், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலையில், யுனிசெஃப் சமீபத்தில் இலங்கைக்கு மிகவும் தேவையான ஆதரவைக் கோரும் அவசர உலகளாவிய வேண்டுகோளை அறிமுகப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.