அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஆயுத போராட்டத்தை தோற்றுவித்தார். ஜனநாயக மக்கள் போராட்டத்தை தவறான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்.
தமிழர்கள் கொல்லப்பட்ட போது எவரும் குரல்கொடுக்காமலிருந்தது கவலைக்குரியது. வெலிகடை சிறைச்சாலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் எங்கே என்பதை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் புதன்கிழமை (27) இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிகாலத்தில் தான் அவசரகால சட்டம் இயற்றப்பட்டதுடன், இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
இனபடுகொலை 39ஆவது வருடத்தை கடந்துள்ளது.வெலிகடை சிறைச்சாலையில் இனபடுகொலையின் 39வது வருடத்தை ஜூலை படுகொலை கரிநாளாக எமது தமிழ் தேசம் நினைவு கூர்கிறது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துறை குட்டிமணி அவர்களோடு மரித்த ஜகன், நடேஷ தாசன் மற்றும் தேவன் உட்பட 53பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் சபையில் எவரும் நினைவுப்படுத்தவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொண்டு,படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவசரகால சட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ள விவாதத்தில் சிங்கள மக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பெரிதளவில் பேசப்படுகிறது.
சிங்கள மக்கள் தாக்கப்பட்டமை வன்மையாக தண்டிக்கத்தக்கது. காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு ,கிழக்கு உட்பட மலையகத்தில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
அவசரகால சட்டத்தை பயன்படுத்தி சிறையை நிரப்புவதற்காக தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டு,கைது செய்யப்பட்ட போது எவரும் குரல் கொடுக்காமலிருந்தது கவலைக்குரியது.
தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதமே கருதப்பட்டது. தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஜே.ஆர் ஜெயவர்தன முறையற்ற வகையில் செயற்பட்டதை தொடர்ந்து தான் ஆயுத போராட்டம் ஆரம்பமானது. ஆகவே தற்போதைய ஜனநாயக போராட்டத்தை தவறான முறைக்கு கொண்டு செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டாம்.
அவசரகால சட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கிறது. வெலிகடை சிறைச்சாலை படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்பட்டது என்பதை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட வேண்டும் என்றார்.