டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம் ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார்.
இனி ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கமைய செயற்படுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று புதன்கிழமை 20 ஆம் திகதி ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் தோற்றம் பெற்றாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் பலவற்றை சாதிக்க முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் கட்சி ரீதியில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கமைய செயற்படுவேன்.
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம், வாக்களித்தோம் இருப்பினும் போட்டியில் அவர் தோல்வியடைந்து விட்டார். அரசியலில் இது வழமையானது. போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார், பிறிதொருவர் தோல்வியடைவார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் தொடர்பில் இரு வேறுப்பட்ட கருத்து காணப்படுகிறது. இருப்பினும் தற்போதைய நிலைமையில் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.