பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கின்றது.
எனினும் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் போது அதன் பலம்வாய்ந்த துடுப்பாட்டக்காரர்களை இலங்கை பந்துவீச்சாளர்கள் குறிப்பாக சுழல்பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் போன்று கட்டுபடுத்துவது அவசியமாகும்.
ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் போட்டியின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை (18) ஆட்டநேர முடிவில் இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் சேர்ந்தபோது இராக்காப்பாளன் கசுன் ராஜித்தவின் விக்கெட்டை இழந்தது.
ஓஷத பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் 3ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சற்று பலப்படுத்தினர்.
ஓஷத பெர்னாண்டோ 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் பிரகாசிக்கத் தவறி 9 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.
அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 76 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (178 – 5 விக்.)
எனினும் முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் குவித்த தினேஷ் சந்திமால் இரண்டாவது இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
அத்துடன் மத்திய மற்றும் பின்வரிசை வீரர்களுடன் 3 சிறப்பான இணைப்பாட்டங்களிலும் சந்திமால் பங்காற்றினார்.
தனஞ்சய டி சில்வாவுடன் 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸுடன் 8ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களையும் மஹேஷ் தீக்ஷனவுடன் 9ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் பகிர்ந்து அணியை பலப்படுத்தினார்.
தனஞ்சய டி சில்வா 20 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் மஹீஷ் தீக்ஷன 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் நவாஸ் 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் யாசிர் ஷா 122 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.