வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவி தெரிவிற்காக ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகபெரும, அனுர குமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார்ககள்.
டலஸ் அழகபெருமவின் பெயரை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிய, அதனை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் உறுதிப்படுத்தினார்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடியது.
ஜூலை மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை சபைக்கு அறிவிக்கப்பட்டதற்கமைய வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு அரசியமைப்பின் பிரகாரம் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்வதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலரின் பொறுப்பில் இருந்து அரசியலமைப்பிற்கமைய முன்னெடுப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவிவித்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவின் விசேட கூற்று 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்கம் ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) உறுப்புரையின் 06 ஆவது உறுப்பின் பிரகாரம் சகல உறுப்பினர்களும் தங்களின் ஆசனங்களில் இருந்து எழுந்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை (தெரிவத்தாட்சி அலுவலர்)அழைத்து வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதிவிக்கு தற்போது சபைக்கு சமுகமளித்துள்ள ஒருவரின் பெயரை பரிந்துரைத்து,அதனை பிறிதொருவர் உறுதிப்படுத்த வேண்டும்.
பெயர் பரிந்துரை மற்றும் உறுதிப்படுத்தல் தொடர்பில் விவாதத்தில் ஈடுப்பட அனுமதி வழங்கப்படமாட்டாது.
பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர் ஜனாதிபதி பதவியில் சேவையாற்ற இணக்கம் என்பதை ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பிரதி என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.வேட்பு மனுத்தாக்கலுக்காக தற்போது வாய்ப்பு வழங்கப்படும் என்பதை சபைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலாவதாக பரிந்துரையை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ‘இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் புதிய ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு டலஸ் அழகப்பெருமவை பரிந்துரைக்கிறேன்’ என்றார்.
இதன்போது பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ‘ புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வேட்பு மனுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள டலஸ் அழகபெருமவின் பெயரை உறுதிப்படுத்துகிறேன்’ என்றார்.
இரண்டாவதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ‘ புதிய ஜனாதிபதியை தெரிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை பரிந்துரைக்கிறேன்’ என்றார்.
சபை முதல்வரின் முன்மொழிவை மனுஷ நாணயக்கார உறுதிப்படுத்தினார்.
இதன்போது எதிர்தரப்பினர் கூச்சலிட்டனர்.முக்கிய கடமை நிறைவேற்றப்படுகிறது ஆகவே சபையில் அனைவரும் அமைதியாக செயற்பட வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார்.
மூன்றாவதாக ‘ புதிய ஜனாதிபதி தெரிவிற்காக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை விஜித ஹேரத் பரிந்துரைக்கிறேன்’என்றார்.
இந்த முன்மொழிவை அக்கட்சியின் உறுப்பினர் ஹரினி அமரசூரிய உறுதிப்படுத்தினார்.
மேலும் உறுப்பினர்களின் பெயர் பரிந்துரை செய்ய சந்தர்ப்பம் உள்ளது என தெரிவத்தாட்சி அலுவலர் குறிப்பிட்டார். பிற பெயர் பரிந்துரை செய்யப்படாததால் 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்கம் ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள் ) உறுப்புரையில் குறிப்பிட்டப்பட்டுள்ள விடயதானங்களுக்கமைய இடைக்கால ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தின் ஊடாக வேட்பு மனுக்கலை பெற்றுக்கொள்வது நிறைவடைந்துள்ளது என்பதை சபைக்கு அறிவிக்கிறேன் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும,பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரது வேட்புமனுக்கலை ஏற்றுக்கொள்கிறேன் என்பதையும் சபைக்கு அறிவிக்கிறேன்.
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) 4,6 ஆகிய உறுப்புரைகளின் பிரகாரம் தற்போது வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக ஒரு உறுப்பினரை தவிர பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அச்சட்டத்தில் 2,3 பிரிவுகளின் பிரகாரம் வாக்கெடுபிபினை நடத்தும் திகதி மற்றும் நேரம் சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதால் ,பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டம்,மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்;டத்தில் கடந்த 11ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பாராளுமன்றம் நாளை (இன்று) காலை 10.00 மணிக்கு கூடும் என்பதை சபை முதல்வர் சபைக்கு அறிவிப்பார் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்தார்.