இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை அணியின் ஊடக இணைப்பாளராக கோபிநாத் சிவராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பொதுநலாவாய விளையாட்டுத்துறை சம்மேளனத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ, பொது முகாமையாளர் காமினி ஜயசிங்க, பிரதான நிர்வாக உத்தியோகத்தர் ஹன்சிகா ஆகியோருடன் இலங்கை அணியின் பிரதான ஊடக இணைப்பாளர் கோபிநாத், இலங்கை அணிக்கான ஆரம்பக்கட்ட கூட்டங்களில் பங்கேற்பதற்காக பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு ஒரு கிழமைக்கு முன்னதாக ஜூலை 21ஆம் திகதி வியாழக்கிழமை இங்கிலாந்து பயணமாகிறார்.
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளராக கோபிநாத் பணியாற்றிவருகிறார். அத்துடன் ஊடகம் மற்றும் மகளிர் குழுக்களின் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்ட வடிமைப்புகளிலும் செயலாற்றி வருவகிறார். மேலும் இவர் விளையாட்டு நிர்வாக கற்கையின் விரிவுரையாளராகவும் கடந்த ஆறு வருடங்களாக தேசிய ஒலிம்பிக் குழுவில் பணியாற்றிவருகிறார்.
கொரியா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு முகாமைத்துவ முதுகலைப் பட்டம் பெற்ற கோபிநாத், சர்வதேச டய்க்வண்டோ சம்மேளனத்திலும் பணியாற்றியிருந்தார்.
இதற்கு முன்னதாக, இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் கணித மற்றும் புள்ளிவிபரவியல் துறையில் அதியுயர் சித்திபெற்று விரிவுரையாளராக பணியாற்றியிருந்தார்.
விளையாட்டு விதிமுறைகளுக்கு எதிராக போட்டிகளை திரிவுபடுத்தப்படுவதனை தடுக்கும் அலுவலராகவும் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் கோபிநாத் நியமிக்கப்படுள்ளதுடன் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விசேட கற்கைநெறியை பயின்று வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும்.
இது இவ்வாறிருக்க, பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் ஊடக இணைப்பாளராக நியமிக்கப்பட்டமை குறித்து கோபிநாத் கருத்து தெரிவிக்கையில்,
‘எனக்கு ஒரு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்படுள்ளது. இளம் வயதில் இலங்கை அணியின் ஊடக இணைப்பாளராக என்னை தெரிவு செய்ததையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
எனக்கு ஊடக இணைப்பாளர் பதவி தவிர, விளையாட்டு விதிமுறைகளுக்கு எதிராக போட்டிகள் திரிவுபடுத்தப்படுவதனை தடுக்கும் அலுவலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களின் பாதுகாப்பு அலுவலர் பொறுப்பினை வழங்கி இருக்கிறார்கள். இந்த இரண்டு பதவிகளும் இதற்கு முன்னர் இலங்கை அணியில் இருக்கவில்லை. இவை முதல் முறையாக வழங்கப்பட்டுள்ள பதவிகள் ஆகும்.
என்னுடைய பணிகளில் கரிசனை காட்டவேண்டிய முக்கியத்துவத்தை பின்பற்றி எனது நாட்டிற்காக போட்டியாளர்களை முன்னிறுத்தி என்னுடைய பணிகளை செவ்வனே ஆற்றுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்
பேர்மிங்ஹாமில் எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 114 போட்டியாளர்கள் (54 வீரர்கள் மற்றும் 60 வீராங்கனைகள்) பங்குபற்றுகின்றனர். அத்துடன் முகாமையாளர்கள், பயிற்றுநர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் என 51 பேர் இங்கிலாந்து பயணமாகின்றனர்.