- அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் யார்? யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் யார்? யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன்படி 48 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுநாளும் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அனுப்பிய சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் 2 நாட்களும் விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அ.தி.மு.க. அலுவலக மோதல் தொடர்பாக வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் மீதம் உள்ளவர்களையும் கண்டறிந்து அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று’ தெரிவித்தார்.