பங்களாதேஷில் 8 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை, இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
குழு A இல் இடம்பெறும் இலங்கையுடன் முதல் சுற்றில் நமீபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.
குழு B இல் மேற்கிந்தியத் தீவுகளுடன் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண B குழுவுக்கான தகுதிகாண் சுற்றில் சம்பியனான ஸிம்பாப்வேயும் இரண்டாம் இடத்தைப் பெற்ற நெதர்லாந்தும் உலகக் கிண்ண முதல் சுற்றில் விளையாட கடைசி 2 அணிகளாக தகதிபெற்றுக்கொண்டன.
முதல் சுற்றில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் நமீபியாவை அக்டோபர் 16ஆம் திகதியும் 2ஆவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை அக்டோபர் 18ஆம் திகதியும் கடைசிப் போட்டியில் நெதர்லாந்தை அக்டோபர் 20ஆம் திகதியும் எதிர்த்தாடும்.
இலங்கையின் முதல் சுற்று போட்டிகள் யாவும் ஜீலோங், கார்டினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெறும்.
முதல் சுற்று முடிவில் A மற்றும் B குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.
சுப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரக்கா ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாட தகுதிபெற்றுக்கொண்டன.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பெற்றதன் அடிப்படையில் இந்த அணிகள் நேரடி தகுதியைப் பெற்றன.
இரண்டு குழுக்காக நடத்தப்படும் சுப்பர் 12 சுற்று நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் நடப்பு உப சம்பியன் நியூஸிலாந்துக்கும் இடையில் சிட்னியில் அக்டோபர் 22ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகும்.
நவம்பர் 6ஆம் திகதி சுப்பர் சுற்று நிறைவடைந்ததும் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நவம்பர் 9ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெறும் அரை இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும்.
அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மெல்பர்னில் நவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெறும்.