புதிய ஜனாதிபதி தெரிவிற்கு போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் பரந்துபட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது என இடதுசாரி ஜனநாய முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பல் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பதவி வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு தற்போது நால்வர் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.நாளைய தினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து இடம்பெறவுள்ள வேட்பு மனுதாக்கலின் பின்னரே எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம்.
சமூக கட்டமைப்பின் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.
பொது தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் நாட்டின் முதல் பிரஜையாக செயற்படுவது மக்களாணைக்கு முற்றிலும் விரோதமானது.
புதிய ஜனாதிபதி தெரிவை தொடர்ந்து பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்காமல் தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாடுடன் செயற்பட வேண்டும்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளதை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் மறுத்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை பல காரணிகளில் ஒரு காரணியாக குறிப்பிட வேண்டும் என்றார்.