பொலிவுட்டை சார்ந்த அறிமுக நடிகை பூஜா பலேகர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் பொண்ணு எனும் திரைப்படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ARTSEE MEDIA PRODUCTION & INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக இந்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், தமிழில் பொண்ணு என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.
படத்தைப் பற்றி நடிகை பூஜா பலேகர் பேசுகையில்,” நான் இந்த படத்திற்காக இங்கு வந்ததில் சந்தோசமடைகிறேன். கடந்த முறை நான் சென்னை வந்த போது தற்காப்பு கலை வீராங்கனையாக வந்தேன். இன்று நடிகையாக இங்கு வந்துள்ளேன். ராம் கோபால் வர்மா சார் படத்தில் நான் நடித்தது, எமக்கு கனவு போல் உள்ளது.
நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை. இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்பு கலையை மையப்படுத்திய படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படம் சீனாவில் 40,000 பட மாளிகைகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக நான் அழைக்கப்பட்ட போது, எனது சண்டை முறைகள் அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் சில பயிற்சிகளை செய்தேன். குறிப்பாக புரூஸ் லீ பயிற்சி பெற்ற சண்டை முறையில் பிரத்யேகப் பயிற்சியை பெற்றேன்.
அதன் பிறகு படபிடிப்பு துவங்கியது. எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. இயக்குநர் ராம் கோபால் சர்மா சார் தான், எனக்கு எல்லா உணர்வுகளையும் வெளியே கொண்டு வர உதவினார். நான் புரூஸ்லியின் ரசிகை, படத்திலும் அப்படியொரு கதாபத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஆதரவு தாருங்கள்.” என்றார்.
கவர்ச்சியும், எக்ஸனும் கலந்து கொமர்ஷல் அம்சங்களுடன் இருப்பதால் ‘பொண்ணு’ திரைப்படத்தை அனைவரும் வரவேற்பார்கள் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.