காற்றானது,
வானத்தின் கூரைகளைப்
பெயர்ப்பதற்கு முன்னான காலத்தில்,
மீசை வைத்த ஒரு தலைவன்
உங்கள் மந்திரியைக் ‘குள்ள நரி’ என்றான்!
அப்போது நீங்களோ…
தலைவனைப்
பயங்கரவாதி என்றீர்கள்!
மூளை நரியைக்
கண்ணால் கண்டவர்களோ,
‘அவன் யானையிலும்
ஆயிரம் மடங்கு பலமுள்ள யானை நரி’ என்றனர்.
நீங்களோ,
‘சிங்க சிங்க வீரசிங்க
வின்னர் சிங்க விக்கிரம சிங்க’ என்றீர்கள்!
உங்கள் வீட்டு வாசல்களில்
அவனுக்குப்
பாற்சோறும் கட்டுச் சம்பலும் வைத்தீர்கள்!
காட்டில் இருந்தவனின் ஞானம்
நாட்டில் இருப்பதில்லை குதம்பாய்!
தீவுக் கன்னியைத்
தானாகக் காதல் செய்யத் தெரியாத,
இன்னொருவன் காதலித்துக் கொடுத்தால்,
அவளைத் திருமணம் செய்து,
அரியணை ஏறுவோனை
நாயகன் என்றீர்கள்!
ஆங்கிலத்தின் நாவும்
குள்ள நரியின் மூளையும்
கொண்ட அவனோ,
உங்கள் புரட்சிக் கீதங்களை
மாமிச வெறியோடு உண்டான்!
அந்த உணவோ
அவனது நாற்காலியின் எலும்பை
இரும்பாக்கியது!
சூரியனின் மையம் வரை முட்டிய,
காலித்திடலின் முதுகெலும்புகளை,
அவன்,
ஏளனத்தோடு
முறிக்கத் தொடங்கியுள்ளான்!
அரச மாளிகைகளை
நீங்கள் கைப்பற்றிய பின்பும்,
ஆட்டக் கயிறு
அவனிடமே இருக்கிறது!
போராட்டத்தின் புத்தியைப்
பேச்சால் மழுங்கச் செய்த அவனோ,
சட்டத்தின் பிரகாரமாக,
உங்கள் மூளைகளைக் கறிசமைத்து,
உண்டு கொண்டே
கட்டளையிடுகிறான் எனில்…
அவனது மூளை
முதலாளித்துவ மூளை!
புரட்சியை, அறிவை, நீதியை
புசிக்கும் மூளை!
அவன் மந்திரியானபோது,
அவனது நாக்கின்
நச்சு வார்த்தைகளை உண்டு,
இளைப்பாறிய உங்களுக்கும்,
உங்கள் தலைமுறைக்கும்
போராட்டம் என்பது
என்னவென்பதே தெரியாத
கையெழுப்பு கோசம் என்பதை
நீங்கள் உணரவில்லையா?
தோழர்களே…!
எங்கள் குழந்தைகள் உணர்வார்கள்.
அவர்கள் அரிச்சுவடியில்
முதலில் ‘அம்மா’ என எழுதுவதே,
தொண்ணூற்று ஏழாயிரம் புத்தகங்களை, எரியூட்டி ஒழித்து,
இன்னும் மிஞ்சியிருக்கும்,
புகையும் தணலும் வற்றாத,
புத்தகங்களின் கரிக் கட்டிகளால்தான்!
புத்தகங்களை எரியூட்டியபோது
கல்வி மந்திரியாய் இருந்தவன்
நாட்டையே எரியூட்டிய போது
பிரதமராய் இருக்கிறான்.
உங்கள் புரட்சியைத் தின்று
இப்போது…
ஜனாதிபதியும் ஆகிறான்!
அவ்வாறெனில்…
அடிமுட்டாள்
வேகமாக வளர்கிறான்
இல்லையெனில்
முட்டாள்கள்
அவனை வேகமாக வளர்க்கிளார்கள்!
நண்பர்களே!
நீங்கள்
முட்டாள்களா
அடிமுட்டாள்களா?
செ. சுதர்சன் 13/07/2022