றோயல் அணிக்கும் திரித்துவ அணிக்கும் இடையில் றோயல் விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (08) கடைசி வரை பரபரப்பை ஏற்படுத்திய 20 வயதுக்குட்பட்ட டயலொக் பாடசாலைகள் முதலாம் பிரிவு ஏ அடுக்கு றக்பி போட்டியில் திரித்துவ கல்லூரி 21 – 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
போட்டியின் முதலாவது பகுதியில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய திரித்துவ அணி இடைவேளையின்போது 13 – 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
போட்டியில் சுமார் 10 நிமிடங்களுக்கு 13 வீரர்களாகவும் மேலும் 15 நிமிடங்களுக்கு 14 வீரர்களாகவும் மட்டுப்படுத்தப்பட்ட திரித்துவ அணி விடாமுயற்சியுடன் விளையாடி றோயல் அணியின் சவாலை முறியடித்து அபார வெற்றியீட்டியது.
இரண்டு அணிகளும் சரிசமாக மோதிக்கொண்ட இப் போட்டியில் 13ஆவது நிமிடத்தில் 40 மீற்றர் பெனல்டி ஒன்றை புபுது விக்ரமசிங்க இலக்கு தவறாமல் உதைத்து திரித்துவ அணியை முன்னிலையில் இட்டார்.
8 நிமிடங்கள் கழித்து றோயல் அணி வீரர்கள் மூவரைக் கடந்து சுமார் 15 மீற்றர் தூரம் பந்துடன் ஓடிய திரித்துவ வீரர் அனுஹஸ் கொடிதுவக்கு அற்புதமான ட்ரை ஒன்றை வைத்தார். அதற்கான மேலதிக புள்ளிகளை விக்ரமசிங்க பெற்றுக்கொடுக்க திரித்துவ அணி 10 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்தது.
எனினும் 7 நிமிடங்கள் கழித்து றோயல் அணிக்கு கிடைத்த இலகுவான பெனல்டியை நஹீல் யஹியா இலக்கு தவறாமல் உதைத்து 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து 35ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனல்டி மூலம் புபுது விக்ரமசிங்க மேலும் 3 புள்ளிகளை திரித்துவத்துக்கு பெற்றுக்கொடுத்தார்.
இடைவேளைக்கு சில செக்கன்கள் இருந்தபோது றோயல் சார்பாக 2ஆவது பெனல்டி புள்ளிகளை யஹியா பெற்றுக்கொடுத்தார்.
இடைவேளையின்போது 13 – 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் திரித்துவம் முன்னிலையில் இருந்தது.
இடைவேளியின் பின்னர் ஆக்ரோஷத்துடன் விளையாடிய றோயல் அணி சார்பாக 45ஆவது நிமிடத்தில் ரஹில் விஜேசேகர ட்ரை ஒன்றை வைத்தார். அதற்கான மேலதிகப் புள்ளிகயை யஹியா பெற்றுக்கொடுக்க புள்ளிகள் நிலை 13 – 13 என சமப்படுத்தப்பட்டது.
5 நிமிடங்கள் கழித்து புபுது விக்ரமசிங்க பெனல்டி ஒன்றை போட்டு திரித்தவ அணியை 16 – 13 என மீண்டும் முன்னிலையில் இட்டார்.
எவ்வாறாயினும் 61ஆவது நிமிடத்தில் திரித்துவ எல்லைக்குள் உருண்டு சென்ற பந்தை நோக்கி வேகமாக ஓடிய ஹன்சக ஹிக்கொட அதன் மீது தாவி அற்புதமான ட்ரை ஒன்றை வைத்தார். அதற்கான மேலதிகப் புள்ளிகளை யஹியா பெற்றுககொடுக்க றோயல் அணி 20 – 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டி முடிவடைய ஓரிரு நிமிடங்கள் இருக்கும்வரை முன்னிலையில் இருந்தது.
ஆனால், போட்டி முடிவடைய 2 நிமிடங்கள் இருந்தபோது றோயல் அணியினர் தங்களுக்கு கிடைத்த ஸ்க்ரம்மின் போது இழைத்த தவறினாலும் ஒரு சில செக்கன்களில் எதிரணிக்கு வழங்கிய பெனல்டியினாலும் தோல்வி அடைய நேரிட்டது.
தமக்கு கிடைத்த பெனல்டியை ஷோர்ட் டெப்பாக பயன்படுத்திய திரித்துவ அணியினர் றோயல் எல்லையை தொடர்ச்சியாக ஆக்கிரமித்தவாறு பந்துடன் முன்னோக்கி நகர்ந்த வண்ணம் இருந்தனர். றோயல் எல்லைக்கோட்டுக்கு ஒரு மீற்றர் இருந்துபோது யசிரு ஆரியவன்ச தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து பந்துடன் தாவி ட்ரை வைத்து திரித்துவ அணியை 21 – 20 என முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து கடைசி நிமிடம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரித்துவ அணியினர் பந்தை தமது எல்லைக்குள் வைத்துக்கொண்டு கடைசி செக்கன்களைக் கடத்திக்கொண்டிருந்தனர். இந் நிலையில் திரித்துவ வீரர் ஒருவர் பந்தை வெளியில் உதைக்க திரித்துவ அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இந்த போட்டி முடிவுடன் முதலாம் பிரிவு ஏ அடுக்கில் திரித்துவம், புனித சூசையப்பர் ஆகிய அணிகளே தோல்வி அடையாத அணிகளாக இருக்கின்றன.