மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும் என முன்னாள் சபாநாயகர் கருஜெயசூர்ய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் உண்மையான செய்தியை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் செவிமடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜெயசூர்ய மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அழுத்தங்களை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்துவதும் அதற்கு ஒடுக்குமுறை மூலம் தீர்வை காணமுயல்வதும் நாட்டையும் மக்களையும் பெருங்குழப்பத்திற்குள் தள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகாபிரேமசந்திர உட்பட பலரை சமீபத்தில் கைதுசெய்ததன் மூலம் தனது பயத்தின் அளவையும்,மக்களின் குரலை எதிர்கொள்ள முடியாத நிலையையும் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுகள் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளிற்காக குரல்கொடுப்பவர்களிற்கு எதிரான தனது மோதல் போக்கையும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீதான தனது இயலாமையையும் அரசாங்கம் முழு உலகத்தின் முன்னாலும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் எங்களை நாகரீக ஜனநாயக உலகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும் அதேவேளை இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள கடும் அழுத்தங்களின் மத்தியில் நாங்கள் தொடர்ந்தும் அமைதியாகயிருக்கமாட்டோம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கருஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளிற்கு அரசாங்க தலைவர்கள் தீர்வை முன்வைக்க தவறியுள்ள நிலையில் எங்கள் குரலை உயர்த்துவNது ஒரே வழி ஆனால் அரச தலைவர்கள் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தியோ அல்லது வேறுவழிகளிலோ இதனை ஒடுக்குவதற்கு முயன்றால் இறுதி முடிவு அவர்களிற்கும் நாட்டிற்கும் சாதகமானதாகயிராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.