இந்த வருடம் நடைபெறவுள்ள லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) இருபது 20 கிரிக்கெட் 3ஆவது அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணி, 4 வீரர்களை முன்கூட்டியே தமது அணியில் பதிவு செய்துகொண்டுள்ளது.
எல்பிஎல் விதிகளுக்கு அமைய வீரர்களை அணிக்கு தெரிவு செய்யும் முறைமைக்கு முன்பதாக 2 உள்ளூர் வீரர்களையும் 2 வெளிநாட்டு வீரர்களையும் அணியில் இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய உள்ளூர் வீரர்களில் துடுப்பாட்ட சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா, இளம் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் முன்கூட்டியே ஜெவ்னா கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்களில் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் எவின் லூயிஸ், தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோயன் ஆகிய இருவரும் முன்கூட்டியே ஜெவ்னா கிங்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜெவ்னா கிங்ஸின் வழமையான அணித் தலைவர் திசர பெரேரா, அஷான் ரந்திக்க, சுழல்பந்துவீச்சாளர்களான மஹீஷ் தீக்ஷன மற்றும் ப்ரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தொடர்ந்தும் ஜெவ்னா கிங்ஸ் அணியினால் தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் .
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது எல்பிஎல் அத்தியாயம் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் செயற்பாடுகள் இன்று பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
வழமைபோல் இந்த வருடமும் ஜெவ்னா கிங்ஸுடன் மேலும் 4 அணிகள் எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.