அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் மஹீஷ் திக்ஷன, துனித் வெல்லாலகே, லக்ஷித்த மனசிங்க ஆகிய சுழல்பந்து வீச்சாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மூவரில் மனசிங்கவைத் தவிர மற்றைய இருவரும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியுள்ளனர். ஆனால், மூவரும் இதுவரை டெஸ்ட் அறிமுகம் பெறவில்லை.
முதல் டெஸ்டில் விளையாடிய லசித் எம்புல்தெனிய இலங்கை குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாலும் ப்ரவீன் ஜயவிக்ரம கொவிட்டினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும் இந்த மூவரில் ஒருவர் 2ஆவது டெஸ்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடதுகை சுழல்பந்துவீச்சாளரான 19 வயதுடைய துனித் வெல்லாலகே, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 9 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்களை மாத்திரம் வீழ்த்தியபோதிலும் அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தினார்.
இதேவேளை அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 2 போட்டிகளில் லக்ஷித மனசிங்க 13 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
இந்த மூவரில் வெல்லாலகே சகலதுறைகளிலும் பிரகாசிக்கக்கூடியவர் என்பதால் அவருக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மெத்யூஸின் 5 நாள் தனிமைப்படுத்தல் இன்றுடன் நிறைவடைகின்றது. இதன் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.