தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாகவும் பேரூந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையாலும் மக்கள் போக்குவரத்திற்காக புகையிரதத்தையே நாடுகின்றனர்.
பெருமளவான மக்கள் கொழும்பு புறநகர்ப்பகுதிக்கு வருவதற்கு புகையிரத சேவையைப்பாவிப்பதால் புகையிரதத்தில் அதிக நெரிசலுடன் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இன்றும் கொழும்பு புறக்கோட்டை பிரதான புகையிரத நிலையத்தில் பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
தற்போது அலுவலகங்களில் ஊழியர்களை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் அழைக்கப்படும் நிலையிலும் புகையிரத்தில் பயணம் செய்பவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.
முழுமையாக ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கலாம் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை டீசல் பிரச்சினை காரணமாக தனியார் பேரூந்துகள் மிகக்குறைந்தளவிலேயே சேவையில் ஈடுபடுகின்றன.
எனினும் அரச பேரூந்துகள் 24 மணி நேரமும் முழுமையாக சேவையில் ஈடுபடுவதாகவும் மக்கள் அச்சமின்றி அரச பேரூந்துகளில் பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் புறக்கோட்டை பிரதான பேரூந்து நிலையத்தின் பேரூந்து இயக்குனர் பிரிவின் உதவி முகாமையாளர் எம்.கீர்த்திபால தெரிவித்தார்.
இன்று காலை புறக்கோட்டை அரச பேரூந்து நிலையத்தில் போதியளவு பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததுடன் பெருமளவான பயணிகளும் பேரூந்து நிலையத்திற்கு வருகைதந்ததையும் காண முடிந்தது.