மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகியதைப் போன்று கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜிநாமா செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மக்கள் தமது பலத்தால் அவரை நிச்சயம் பதவி விலக செய்வார்கள். இதனை எவராலும் தடுக்க முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் (04) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றமையும் அரசாங்கத்தின் ஒரு வழிமுறையாகும். இது பாதுகாப்பு துறையினருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாகும்.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமக்கு பாதுகாப்பு துறையினருடன் எவ்வித பிரச்சினையும் கிடையாது.
இந்த அரசாங்கத்தை பதவி விலக செய்வதே எமது இலக்காகும். அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கியவர்கள் மக்களாவர்.
எனவே அரசாங்கத்தை விட அதிகாரம் மிக்கவர்கள் மக்களே. அதன் காரணமாகவே பதவி விலக வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லாமலிருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜிநாமா செய்ய நேர்ந்தது. பஷில் ராஜபக்ஷவுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது.
அதே போன்று வெகுவிரைவில் கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்படும். மக்கள் அவரை பதவி விலக செய்வார்கள். இதனை எவராலும் தடுக்க முடியாது. அவரை பதவி விலக செய்வதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின் அதனை எதிர்கொள்ளும் திறன் எமக்கிருக்கிறது.
இதன் ஒரு அங்கமாகவே அரசாங்கம் தற்போது புலிகள் விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது , திடீரென புலிகள் தலை தூக்குவார்கள். இது மிகவும் பழைய வழிமுறை என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகின்றோம். இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றி தற்போது மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.