நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது.
மேலும் பழைய இரும்புக்காக ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்த துவிச் சக்கர வண்டிகளின் உதிரி பாகங்களை மீளவும் கிலோ 800 ரூபாவிற்கு கொள்வனவு செய்து அவற்றை திருத்தி பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.
துவிச்சக்கரவண்டி பாவனை

ஆதி காலத்தில் கால்நடையாகவும் மிருகங்களையும் போக்குவரத்து சாதனங்களாக மனிதன் பயன்படுத்திய நிலையில் கால மாற்றத்தாலும் நாகரிக வளர்ச்சியாலும் நவீன போக்குவரத்து சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதன் பின்னர் ஒவ்வொருவரும் தத்தமது போக்குவரத்துக்களுக்காக மோட்டார் சைக்கிள்கள், சொகுசு கார்களையும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மீளவும் துடிச்சக்கர வண்டிகளை அதிகளவானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் புதிய துவிச்சக்கர வண்டிகளினுடைய விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டி பாவனையும் அதிகரித்துள்ளது.

அதாவது ஆரம்பத்தில் 18000 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை தற்போது 87ஆயிரம் ரூபாவை கடந்து சென்றுள்ளது.
அத்துடன் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வீடுகளில் காணப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் முன்பு பழைய இரும்புகளுக்காக கிலோ 50 ரூபாய்க்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டன.
உதிரிபாகங்கள்

இந்த நிலையில் தற்போது பழைய இரும்புகளுக்காக விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டி உதிரி பாகங்களை பழைய இரும்பு வியாபாரிகளிடமிருந்து கிலோ 600 முதல் 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அவற்றை மீளவும் புதிய உதிரி பாகங்களை பொருத்தி துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதனால் துவிச்சக்கர வண்டி திருத்தும் நிலையங்களில் அதிகளமான துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதை அவதானிக்க முடிவதுடன் துவசக்கர வண்டி உதிரி பாகங்களினுடைய விலையும் மிக சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன.
உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் போக்குவரத்து சாதனங்களாகவும் துவிச்சக்கர வண்டிகள் கடந்த காலங்களிலே பயன்படுத்தப்பட்டாலும் பின்னாளில் துவச்சக்கர வண்டியை பயன்படுத்துவோர் மிக அரிதாகவே காணப்பட்டனர்.
ஆனால் இன்று துவிச்சக்கர வண்டிகளினுடைய பாவனை என்பது அதிக அளவிலே காணப்படுகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
நன்றி – தமிழ்வின்